தூக்கத்தில் இந்திய தூதரகம்:சிறையில் மீனவர்கள்?


இந்திய தூதரக்கத்தின் அசட்டையீனத்தால் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட எட்டு இந்திய மீனவர்களையும் ஆறாவது தடவையாக எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 13ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு விபத்துக்குள்ளான நிலையில் இராமேஸ்வரத்தை சேர்ந்த எட்டு மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட எட்டு மீனவர்களையும் காங்கேசன்துறை காவல்துறை ஊடாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.அதனை அடுத்து எட்டு மீனவர்களும் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டனர்.

அந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் அ.ஜூட்சன் முன்னிலையில் எடுத்தக்கொள்ளப்பட்ட போது , எட்டு மீனவர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11ஆம் வகுப்பு படிக்கும் சாம் டேனியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் துரைபாண்டி இருவரது கல்வியை கருத்தில் கொண்டு, அவர்களை விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை குறித்த படகு விபத்தில் இரமேஸ்வரத்தை சேர்ந்த முனுசாமி எனும் மீனவர் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments