இனி பேரம் பேச ஏதுமில்லை:சிவசக்தி ஆனந்தன்?


தற்போதைய ஆட்சியாளர்களின் காலத்தில் தமிழ்த் தரப்புக்கு பேரம்பேசும் இறுதிச் சந்தர்ப்பமாக ஏப்ரல் ஐந்தில் நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பே உள்ளது. அதனை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பயன்படுத்த வேண்டும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
போர் நிறைவுக்கு வந்து ஒரு தசாப்தத்தை தொடவுள்ள நிலையில் இன்னமும் இலங்கையின் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின்போது இவர்களின் விடுதலையும் பிரதான பேசுபொருளாக இருந்தது. ஆனால் ஆட்சி மாறிய பின்னர் அந்த விடயத்தினை அழுத்தமாக பிடிப்பதற்கு தமிழ்த் தரப்புக்கள் தவறியே வந்துள்ளன.

ஒவ்வொரு வரவு செலவுத் திட்டத்திற்குமான இறுதி வாக்கெடுப்பிற்கு சற்று
முன்னர் அரசாங்கத்தின் தலைவர்களுக்கும், கூட்டமைப்புக்கும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றது. இதன்போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும் பத்தோடு பதினொன்றாக கூறப்படுமே தவிர எதுவுமே செயல் வடிவம் பெறுவதில்லை.  இதனைவிடவும், அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக தாமாகவே போராட்டங்களை முன்னெடுக்கின்றபோது தமிழ் தலைமைகளே நேரடியாக சென்று வாக்குறுதிகளை வழங்கி போராட்டங்களை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளன. அதற்குப் பின்னரான காலத்தில் கண்துடைப்புக்காக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றதே தவிர செயற்பாட்டு ரீதியாக எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை.

மக்களின் இயல்பான எழுச்சிப் போராட்டங்களும் மழுங்கடிக்கப்பட்டு, கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பகளும் வீணடிக்கப்பட்டு தற்போது தமிழ் அரசியல் கைதிகள் விடயம் கிடப்பிலேயே உள்ளது. 
கடந்த காலத்தில் நடைபெற்ற வரவு செலவுத்திட்டங்கள், ஒக்டோபரில் நடைபெற்றஅரசியல் குழப்பம் பின்னர் அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்தல் என எந்தவொரு கட்டத்திலும் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் உட்பட எந்தவொருவிடயத்தினையும் முன் நிபந்தனையாக வைத்து பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பங்களை எல்லாம் கைவிட்டு தென்னிலங்கையிடம் சரணாகதி அடைந்துள்ள தமிழ்த் தரப்பினருக்கு தற்போதைய சூழலில் ஒரு இறுதிச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

எதிர்வரும் எப்ரல் ஐந்தாம் திகதி தற்போதைய ஆட்சியாளர்களின் இறுதி
வரவுசெலவுத்திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்தவாக்கெடுப்பில் கூட்டமைப்பின் வாக்குகள் அதீத செல்வாக்கினை செலுத்துவதாக உள்ளன. எந்தவொரு நிபந்தனையுமின்றி கம்பெரலிய திட்டம் கிடைத்து விட்டது
என்ற மாயைக்குள் சிக்கி எழுந்தமானமாக ஆதரவளிக்காது, தமிழ் அரசியல்
கைதிகளின் விடுதலைக்கு உறுதியான பதிலளிக்க வேண்டும் என்ற விடயத்தினை முன்வைத்து பேரம்பேச வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தினை நழுவ விட்டால் எதிர்காலத்தில் கூட்டமைப்பினதுஎந்த ஒத்துழைப்பும் அரசாங்கத்திற்கு தேவைப்படாது. அதன் பின்னர் கூட்டமைப்பால் அரசாங்கத்தினை கிடுக்குப்பிடி பிடிக்க முடியாது என்பதே யதார்த்தமாகும். ஆகவே வரவு செலவுத்திட்டம் முதல் ஜெனீவா வரை அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இருபது முப்பது வருடங்கள் இளமையை, உறவுகளை தொலைத்து சிறைகளில் வாடுகின்றவர்களின் விடுதலையை இதயசுத்தியுடன் வலியுறுத்தி மனிதபிமானத்தின் பால் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டியது அவசியமாகின்றதென சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

No comments