பாலுக்கும் காவல்: பூனைக்கும் தோழன்?


காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நாளை 25 ஆம் திகதி நடத்தப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவாக, கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ரெலோ, புளொட் என்பன தமது ஆதரவை வெளியிட்டுள்ளன. இரண்டு கட்சிகளின் தலைவர்களும் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

ஒருபுறம் தமிழரசின் பங்காளிகளாக கொழும்பில் அரசின் சலுகைகளை அனுபவித்துவருகின்ற இக்கட்சிகள் மறுபுறம் வாக்கு வங்கிக்காக துண்டுவிரிக்க முன்வந்துள்ளன.

புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் கருத்து தெரிவிக்கையில்- காணாமல் போனவர்கள் விவகாரம் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ளது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல்கைதிகள் விவகாரத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுத்து (?) வருகிறது. இதன் விளைவாக, காணாமல் போனவர்களிற்கான பணியகம் உருவாக்கப்பட்டிருந்தாலும், அது இன்னும் முழுமையான செயற்பாட்டு அமைப்பாகவில்லை. காணாமல் போனவர்கள் விவகாரத்தில் உண்மை கண்டறிப்பட வேண்டும், அரசு பொறுப்புக்கூற வேண்டும், குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டின் அடிப்படையில், காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் நீதிக்கான போராட்டத்திற்கு எமது ஆதரவை தெரிவிக்கிறோம் என்றார்.

ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இந்த போராட்டத்திற்கும், கதவடைப்பிற்கும் தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளதுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம் நியாயபூர்வமானதுடன் அது நிறைவேற அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments