நாளைய ஹர்த்தால்:கூட்டமைப்புக்குள் குழப்பம்!


நாளைய தினம் இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள் என அனைவரும் ஆதரவு தெரிவித்து அறிக்கைகள் விடுத்துள்ள போதும் இன்று மாலை வரை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது உத்தியோகபூர்வமாக ஆதரவுத் தெரிவித்து அறிவிப்பு எதனையும் விடவில்லை.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு,சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஈபிடிபி, யாழ் பல்லைகழக சமூகம், வர்த்தக சங்கங்கள், என பலரும் நாளைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இதுவரை உத்தியோகபூர்வமாக ஆதரவு தெரிவித்து அறிக்கைகள் எதனையும் வெளியிடவில்லை. அக்கட்சியின் தலைவர் இரா.சம்மந்தனோ அல்லது கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனோ தமிழரசு கட்சியின் தலைவர் சேனாதிராஜாவோ ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கவில்லை. அத்துடன் சிறீதரனும் கூட மௌனத்தையே கடைப்பிடித்து வருகின்றார்.
இதனிடையே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் எதிர்வரும் 25 ஆம் திகதி வடக்கு கிழக்கில் நடத்தப்படவுள்ள ஹர்த்தாலுக்கும் அவர்களது போராட்டத்துக்கும் தமது ஆதரவை தெரிவிப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம் நியாயபூர்வமானதுடன் அது நிறைவேற அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம் தீர்க்கப்படாமல் உள்ளது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல்கைதிகள் விவகாரத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதன் விளைவாக, காணாமல் போனவர்களிற்கான பணியகம் உருவாக்கப்பட்டிருந்தாலும், அது இன்னும் முழுமையான செயற்பாட்டு அமைப்பாகவில்லை. காணாமல் போனவர்கள் விவகாரத்தில் உண்மை கண்டறிப்பட வேண்டும், அரசு பொறுப்புக்கூற வேண்டும், குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டின் அடிப்படையில், காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் நீதிக்கான போராட்டத்திற்கு எமது ஆதரவை தெரிவிக்கிறோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments