தேசிய அரசு என்ற பேச்சிற்கே இடமில்லை - செல்வம்

“தேசிய அரசு என்பது, அரசின் நிலைப்பாடென்பதால், அதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றைக்கும் பங்காளியாக இருக்காது. அதற்கு கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவளிக்காது.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“தமிழ் மக்களின் விடுதலை என்பது இன்னும் முற்றுப்பெறவில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை அடக்கும் சக்திகள் பல்வேறு நிலைகளில் இருந்தன

அதனை நாங்கள் கதைத்தால் இனவாதமென்பர். நில அபகரிப்பு, அரசால் மட்டும் செய்யப்படவில்லை. பல்வேறு வழிகளில் இடம்பெறுகின்றன.

கிழக்கில் மக்களை வழிநடத்தவேண்டுமானால் அது இளைஞர்களினாலேயே முடியும்.

அன்றாடப் பிரச்சினையைத் தீர்ப்பது, அடுத்ததாக தமிழ் மக்களின் இறையாண்மை, நிலங்களைப் பாதுகாத்தல் என தமிழர்களின் பிரச்சினைகளை இரண்டாகப் பார்க்கவேண்டும்.

இவ்விரண்டு விடயங்களிலும் இளைஞர்கள் கவனமெடுக்கவேண்டும். அதற்காக ஆயுதமேந்தி சண்டையிடுங்கள் என்று சொல்லவில்லை. அவ்வாறான நிலையொன்று இனி ஏற்படப்போவதும் இல்லை” – என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் பல்வேறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சிங்கள தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் விமர்சனங்களை விடவும் தமிழர்கள் தரப்பில் இருந்தே அதிகளவான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

சிங்களத் தரப்பை விமர்சிப்பதை விடவும் தமிழர் தரப்பை விமர்சிக்கும் நிலையே தமிழர் தரப்பில் அதிகமாகக் காணப்படுகின்றது.

இந்த அரசுடன், கூட்டமைப்பு சோரம்போயுள்ளதென யாராவது விரல் நீட்டமுடியாது. கடந்த மூன்று ஆண்டுகளாக அரசுக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம். காணாமல்போனோர் பிரச்சினைக்காக ஓர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்கவேண்டும் என நாங்கள் கோரி வருகின்றோம்.

கூட்டமைப்பைச் சேர்ந்த சிலரின் பேச்சுகளே, கூட்டமைப்புக்கு எதிரான கருத்துகளை உருவாக்கியுள்ளது.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முற்றாகத் தீர்க்கப்படவில்லை. எங்களுக்கு சுதந்திரமில்லை. அதனை எங்கள் மக்கள் சொல்லுகின்றபோது, அதற்கு மாறான கருத்துகளை தெரிவிக்கும்போதே விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

சோரம் போகாமலே, இந்த அரசை உருவாக்கியவர்கள் என்ற அடிப்படையில், வெளியிலிருந்து ஆதரவு வழங்கி வருகின்றோம். நாங்கள் நினைத்திருந்தால் பல அமைச்சுகளை பெற்றிருக்கமுடியும்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வைத்துக்கொண்டு, தேசிய அரசை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அது அரசின் நிலைப்பாடாகும். அதில், கூட்டமைப்பு ஒருபோதும் பங்காளியாக இருக்காது.

கூட்டமைப்பு இன்றும் நிதானமாகவே செயற்பட்டு வருகின்றது. இனப்பிரச்சினை, ஐ.நா. சபையின் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதை, இங்கு வருகை தருகின்ற சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

ஐ.நா சபையின் தீர்மானங்களைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதற்கு, இந்த அரசுக்கு உடந்தையாக இருக்க முடியாது” – என்றார்.

No comments