இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் புதிய தீர்மானம்

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அடுத்த மாதம் இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வரும் நடவடிக்கைக்குத் தலைமை தாங்கப் போவதாக பிரிட்டன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான பிரிட்டன் தூதரகம் இது குறித்து விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான தீர்மானத்தின் மீது கவனம் செலுத்தப் போவதாகவும், சிரியா, தென்சூடான் தொடர்பான தீர்மானங்களையும் முன்வைக்கப் போவதாகவும் பிரிட்டன் கூறியுள்ளது.

பிரிட்டனுடன் இணைந்து, கனடா, ஜேர்மனி, மெசிடோனியா, மொன்ரெனிக்ரோ ஆகிய நாடுகள், இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைக்கவுள்ளன.

“இணை நாடுகள் மீண்டும் இலங்கையுடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றன.

இந்த ஒத்துழைப்பு 2015இல் ஆரம்பித்தது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் வாக்குறுதிகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த இணைந்து செயற்படும்.

தீர்மான வரைவு இயல்பான நடைமுறைப்படி இருக்கும். அத்துடன், 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறுவப்பட்ட செயல்முறைகளை மேலும் விரிவுபடுத்தக் கோருவதாக அமையும்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் நடைமுறைகளுக்கு அமைய முறைசாரா பேச்சுக்களை நாங்கள் ஆரம்பிப்போம்.

மீண்டும் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு மனித உரிமைகள் சபையின் முழு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகின்றோம்” என்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

No comments