முல்லைதீவு ரணிலுக்கு எதிர்ப்பினை பதிவு செய்தது!


வடக்கிற்கான மூன்று நாள் விஜயமாக வருகை தந்துள்ள சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முல்லைத்தீவு மண் தனது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது.யாழப்பாணம் கிளிநொச்சியில் கூட்டமைப்பு செங்கம்பளம் விரிக்க முல்லைதீவு தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.

அரசாங்க அதிபர் செயலகத்திற்கு அபிவிருத்தி (?) தொடர்பாக ஆராய ரணில் சென்றிருந்த நிலையில் வருகையினை எதிர்த்து முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் கேப்பாபுலவு காணிவிடுவிப்பிற்கான போராட்ட களத்தை திறந்துள்ள மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் குதித்திருந்தார்கள். 

இந்நிலையில்  போராட்டத்தில் குதித்திருந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளையும் கேப்பாபுலவு காணிவிடுவிப்பிற்கான போராட்டகாரர்களையும்  இலங்கை காவல்துறை  அரச அலுவலகம் செல்ல விடாது  தடுத்து நிறுத்தியுள்ளனர்.

எந்தவொரு அரசியல் தரப்பின் ஆதரவுமற்று மக்கள் வீதியோரங்களில் தமது சுலோக அட்டைகளை தாங்கியவாறும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தவர்களது படங்களையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


இதனையடுத்து பேரூந்துகளில் அழைத்துவரப்பட்டு குவிக்கப்பட்ட காவல்துறையினர் அவர்களிற்கு தடுப்பாக நிறுத்தப்பட்டிருந்தனர்.

இதனிடையே போராட்டகாரர்களை விரட்ட காவல்துறை முற்பட தம்மை ஒரேயடியாக சுட்டுக்கொன்றால் பிரச்சினை தீர்ந்துவிடுமென மக்கள் எச்சரித்திருந்தனர்.

No comments