கேள்வி மனுவை உடைத்து விற்று காசு சம்பாதிக்கும் யாழ் மாநகரசபையினர்

நல்லூர் ஆலயப் பெருந்திருவிழாவின் போது ஆலய சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு என கண்காணிப்புக் கமராக்கள் பொருத்துவதற்கு யாழ் மாநகரசபையால் கேள்வி கோரப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகோரல் விண்ணப்பங்கள் இரகசியமாக உடைக்கப்பட்டு போட்டி நிறுவனங்களுக்கு அதன் பிரதிகள் பகிரப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த விடையத்தினை இன்று நடைபெற்ற யாழ் மாநகரசபையின் அமர்வின் போது சபையின் கவனத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மற்றொரு உறுப்பினரான சி.தனுஜன் கொண்டுவந்தார்.

ஆலயப் பணிக்கென தான் மிகக் குறைந்த விலையில் பாதுகாப்புக் கமராக்களைப் பொருத்தியபோதும் யாழ் மாநாகரசபையினர் தனது கோள்வி கோரல் விண்ணப்பப் பிரதிகளை வேறு போட்டி நிறுவனத்திற்கு விற்றுவிட்டதாகவும் அதனால் தான் கமாராக்களைக் கொள்வனவு செய்யும் சீன நிறுவனம் தன்னுடனான ஒப்பந்தத்தினை இரத்துச் செய்ய முடிவுசெய்திருப்பதாகவும் குறித்த கமரா பொருத்துனர் நிறுவனத்தினர் தெரிவித்ததாக உறுப்பினர் தனுஜன் தெரிவித்தார்.

குறித்த கமராக்களைப் பொருத்திய நிறுவனம் யாழ் மாநகரசபைக்குச் சமர்ப்பித்த கேள்வி கோரல் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுக்கும் திகதிக்கு முன்னர் உடைக்கப்பட்டு போட்டி நிறுவனம் ஒன்றிற்கு வழக்கப்பட்டதாகவும் குறித்த போட்டி நிறுவனம் அதன் பிரதியை பாதுகாப்புக் கமராக்களை குறித்த நிறுவனங்களுக்கு வழங்கும் சீன தலைமை நிறுவனம் ஒன்றிற்கு அனுப்பிவைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் கட்டுப்பாட்டு விலைக்கு குறைந்த கட்டனத்தில் பாதுகாப்புக் கமராக்களை பொருத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதால் குறித்த தனியார் நிறுவனத்தினருடான தங்கள் ஒப்பந்தத்தை அச் சீன நிறுவனம் இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதன்போது குறித்த விடயங்கள் தொடர்பில் தானும் அறிந்ததாகவும் இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான லோக தயாளன் குறிப்பிட்டார். இந்நிலையில் இவை தொடர்பில் ஆராய்வதாக சபை முதல்வர் ஆர்னோல்ட் குறிப்பிட்டார்.

No comments