கொடுத்தது 6 இலட்சம் கணக்கு 10 இலட்சம் - யாழ் மாநகர திருகுதாளங்கள்

நல்லூர் உற்சவகாலத்தின் போது ஆலயச் சூழலின் பாதுகாப்பிற்கு என யாழ் மாநகரசபையினால் பொருத்தப்பட்ட பாதுகாப்புக் கமராக்களுக்கென ஒப்பந்த அடிப்படையில் குறித்த நிறுவனம் ஒன்றிற்கு வழங்கியை நிதியினை விட அதிகமாக 4 இலட்சத்து 16 ஆயிரத்து 280 ரூபா பணத்தினை குறித்த  பாதுகாப்புக் கமராக்கள் பொருத்துவதற்கான செலவாக காட்டப்பட்டுள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை இன்று நடைபெற்ற சபை அமர்வின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பியதன் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நல்லூர் உற்சவகால திருவிழாக்களின்போது நல்லூர் பிரதேசத்தின் பாதுகாப்பிற்கென பாதுகாப்புக் கமராக்கள் பொருத்துவதற்கு பகிரங்க கேள்வி கோரப்பட்டது. அதற்கென சில நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.

இந்நிலையில் யாழ் பரமேஸ்வராச் சந்தியில் இயங்கும் City Computer நிறுவனத்தினரின் கேள்வி கோரல் ஏற்கப்பட்டு குறித்த நிறுவனத்திடம் பாதுகாப்புக் கமராக்கள் பொருத்தும் பணி வழங்கப்பட்டது. அதனடிப்படையில் குறித்த நிறுவனத்திற்கு யாழ் மாநகரசபையால் 6 இலட்சத்து 60 ஆயிரத்து 200 ரூபா கொடுப்பனவான வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று யாழ் மாநகரசபையில் நடைபெற்ற அமர்வின்போது நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்த நல்லூர் ஆலய வரவு செலவு அறிக்கை ஒவ்வொரு உறுப்பினருக்கும் வழங்கப்பட்டிருந்தது. அதனை அவதானித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன்  நல்லூர் சூழலில் பாதுகாப்புக் கமரா பொருத்திய செலவாக 10 இலட்சத்து 76 ஆயிரத்த480 ருபா கணக்குக் காட்டப்பட்டிருந்தமை தொடர்பில் குறித்த நளின் நிறுவனத்தினருடன் தொடர்புகொண்டு எவ்வளவு ரூபா மாநகரசபையால் வழங்கப்பட்டுள்ளது எனக் கேட்டுள்ளார்.

அதன் போது குறித்த கண்காணிப்புக் கமரா பொருத்தும் நிறுவனத்தினர் வழங்கிய தகவல் உறுப்பிரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. குறித்த நிறுவனத்திற்கு வழங்கிய தொகையை விட அதிகமாக 4 இலட்சத்து 16 ஆயிரத்து 280 ரூபா பணத்தினை அத் தேவைக்காக செலவிடப்பட்டதாக அறிந்த அவர் நேரடியாக அந் நிறுவனத்தினரைச் சந்தித்து கலந்துரையாடியபோது தாம் சமர்ப்பித்து வழங்கப்பட்ட ரசீதுகளின் பிரதிகளை உறுப்பினருக்கு குறித்த நிறுவனத்தினர் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து இன்றை யஅமர்வின்போது குறித்த விடயத்தைப் பிரஸ்தாபித்த உறுப்பினர் பார்த்திபன் பாதுகாப்புக் கமராக்கள் பொருத்துவதற்கென 6 இலட்சத்து 60 ஆயிரத்து 200 ரூபா செலவிடப்பட்டுள்ள நிலையில் செலவு அறிக்கையில் 10 இலட்சத்து 76 ஆயிரத்த480 ருபா செலவிடப்பட்டதாக மோசடி இடம்பெற்றதாக சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து சபையில் பிரசன்னமாகியிருந்த கணக்காளரைப் பதிலளிக்குமாறு முதல்வர் ஆர்னோல்ட் உத்தரவிட்ட நிலையில் அது தொடர்பில் உடனடியாகப் பதிலளிக்க முடியாது எனவும் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து ஏதும் தவறு நிகழ்ந்திருப்பின் அது தொடர்பில் ஆராய்ந்து அடுத்த அமர்வில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆர்னோல்ட் உத்தரவிட்டார்.

No comments