கோத்தாவின் வழிநடத்தலில் படையினர் போர்க்குற்றம் - பொன்சேகா

“இராணுவத்தினர் அனைவரும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. அவர்களில் சிலர் மட்டும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர். இராணுவத்தினர் எந்தச் சந்தர்ப்பங்களிலும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்று கூற முடியாது. போர்க்குற்றம் புரிந்த இராணுவத்தினரைப் பாதுகாப்பதற்கு ராஜபக்ச அணியினர் அன்றும் முயற்சி செய்தார்கள்; இன்றும் முயற்சி செய்தார்கள். இலங்கை இராணுவத்தினரின் நற்பெயரை சர்வதேச மட்டத்தில் நாம் பாதுக்காக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.”

– இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ‘பீல்ட் மார்ஷல்’ சரத் பொன்சேகா.

அவர் மேலும் கூறுகையில்,

“இராணுவத்தினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபய ராஜபக்சவும், இறுதிப் போரின்போது கோட்டாபய ராஜபக்சவின் நிகழ்ச்சின் நிரலின் பிரகாரம் செயற்பட்டு போர் நிறைவடைந்த பின்னர் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற ஜகத் ஜயசூரியவும் முழுப் பொறுப்பு.

இறுதிப்போரின்போது இராணுவத்தின் பிரதான தளபதியாக நானே இருந்தேன். பாதுகாப்பு அமைச்சின் செயலராக கோட்டாபய ராஜபக்ச இருந்தார். ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச இருந்தார். போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர கோட்டாபய ராஜபக்ச ஒரு நிகழ்ச்சி நிரலை வைத்திருந்தார். அந்த நிகழ்ச்சி நிரலுக்கு மஹிந்த ராஜபக்ச அனுமதி வழங்கியிருந்தார். ஆனால், நான் எனது சுயபுத்தியில் செயற்பட்டேன். போரில் பெரும் வெற்றியை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்தேன்.

எனினும், கோட்டாபய ராஜபக்ச தான் தயாரித்த நிகழ்ச்சி நிரலை இறுதிப் போரின்போதும் போர் நிறைவடைந்த பின்னரும் மறைமுகமாக நடைமுறைப்படுத்தி இருந்தார். இதற்கு இராணுவத் தளபதிகளில் ஒருவராக இருந்த ஜகத் ஜயசூரிய முழுப் பங்களிப்பு வழங்கினார்.

இவர்கள் இருவரினதும் இந்தச் செயற்பாடுகளினால் போரின் இறுதியின்போதும் அதன் பின்னரும் சில குற்றங்கள் இடம்பெற்றதாக எனக்குத் தகவல் கிடைத்தது. இராணுவத்தினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகளுக்கு மஹிந்த ராஜபக்சவும், கோட்டாபய ராஜபக்சவும், ஜகத் ஜயசூரியவும் பொறுப்புக்கூற வேண்டும்.

அதைவிடுத்து கிளிநொச்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போர்க்குற்றம் தொடர்பில் தெரிவித்த கருத்தை இவர்கள் விமர்சனம் செய்கின்றார்கள். பிரதமரின் கருத்தை விமர்சிப்பதற்கு இவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை” – என்றார்.

No comments