காட்டிக்கொடுத்த ரணில் - கொக்கரிக்கும் கோத்தா

“எமது இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஒருபோதும் ஈடுபடவில்லை. இறுதிப் போரில் அவர்கள் மனிதத் தன்மையுடன் நடந்தார்கள். தமது உயிரை அர்ப்பணித்து தமிழ் மக்களை மீட்டெடுத்தார்கள். இராணுவத்தினரும் போர்க்குற்றம் புரிந்தனர் என்று வடக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாபெரும் பொய் ஒன்றைச் சொல்லியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்களின் வாக்குகளை தம் வசப்படுத்தவே இந்தப் பொய்யைப் பிரதமர் கூறியுள்ளார். ஆனால், தெற்கில் உள்ள மக்கள் அவரை மன்னிக்கவே மாட்டார்கள்.”

– இப்படிக் கூறியுள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“போரின்போது எமது இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் சடலங்களின் படங்களையும், விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பொதுமக்களின் சடலங்களின் படங்களையும் வைத்துக்கொண்டு இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்று புலம்பெயர் புலிகள் அமைப்பினர் கருத்து வெளியிடுகின்றனர். இதை சில நாடுகளும், சில சர்வதேச அமைப்புகளும் நம்புகின்றனர்.

இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஜெனிவாவில் இலங்கை மீது போர்க்குற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தற்போது இவற்றை நியாயப்படுத்தும் வகையில் பிரதமர் ரணிலும் கருத்து வெளியிட்டுள்ளார். தமிழ் மத்தியில் தனது அரசியல் இருப்பை தக்கவைக்கவே பிரதமர் பொய்யுரைக்கின்றார்.

இறுதிப் போரின் பாதுகாப்பு அமைச்சின் செயலராக நான் இருந்தேன். எமது இராணுவத்தினர் எந்தச் சந்தர்ப்பங்களிலும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. அவர்கள் மிகவும் நேர்மையுடன் நடந்தார்கள்.

போரின் நிறைவில் சரணடைந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிப் போராளிகளை எமது இராணுவத்தினர் பக்குவமாக எம்மிடம் ஒப்படைத்தார்கள்.

அந்தப் போராளிகளுக்கு நாம் புனர்வாழ்வு வழங்கினோம். பின்னர் அவர்களை விடுதலை செய்து சமூகத்தில் இணைத்தோம்.

இந்நிலையில், எமது இராணுவத்தினரைக் காட்டிக் கொடுக்கும் வகையில் பிரதமர் ரணில் செயற்படுகின்றார்.

இதற்கான தண்டனையை தேர்தலின்போது அவர் எதிர்நோக்குவார். தெற்கு மக்கள் ஒருபோதும் அவரை மன்னிக்கமாட்டார்கள்” – என்றார்.

No comments