புலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை?


புலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டைப்பஞ்சாயத்துக்கள்,பிரதேச வன்முறைகளினை தூண்டிவிடுவதில் இத்தரப்புக்கள் பலவும் தற்போது ஆர்வத்துடன் செயற்பட்டுவருகின்றன.

தென்மராட்சி - வரணிப் பகுதியில் இவ்வாறு புலம்பெயர் தமிழர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த 12 பேர் கொண்ட கூலிப்படை நேற்று மாலை வீடு புகுந்து சரமாரியாக வாளால் வெட்டியதில் கனடாவில் இருந்து வந்த மற்றொரு நபர்; தலையில் படுகாயமடைந்தார்.

48 வயதான வேதாரணியம் ஜெகதீசன் என்பவரே வாள் வெட்டில் காயமடைந்தவராவார். ஊர் கோவில் பிரச்சினை ஒன்றின் விளைவாகவே வெளிநாட்டில் இருந்து ஒருவர் கூலிப் படைகளை அனுப்பி தன்னை வெட்டியதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இருந்து கடந்த இரு வாரங்களுக்கு முன்னரே இவர் ஊருக்கு வந்துள்ளார். வரணி - மசேரியில் உள்ள தனது வீட்டில் இவர் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் திடீரென 12 பேர் கொண்ட கும்பலொன்று வீட்டுக்குள் அத்துமீறி இவரைச் சரமாரியாக வெட்டியது. 

வீட்டில் இருந்த வயதான தாய், தந்தையர் தடுத்தவேளை அவர்களைத் தள்ளி விழுத்திவிட்டு வாள் வெட்டுக் கும்பலைச் சேர்ந்தோர் இவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் வெளிநாட்டில் உள்ள ஒருவர் தன்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கொன்றுவிடுவேன் என மிரட்டியதாக அவர் தெரிவித்தார். குறித்த நபரே கூலிப்படையினரை வைத்து தன்னை வெட்டியதாகவும் அவர் தெரிவித்தார். அவரது பெயர் விபரங்களுடன் இது குறித்து பொலிஸில் முறையிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments