தொங்கவிட ஆளில்லை:இராணுவத்திற்கு சிபார்சு!


இலங்கையில் மரண தண்டனைகளை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, விளம்பரம் செய்யப்பட்டிருந்த போதிலும், இருவரையிலும் ஒரு விண்ணப்பமேனும் கிடைக்கவில்லையென சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னரும் இதே போன்று விண்ணப்பம் கோரப்பட்டு தோல்வியே மிஞ்சியிருந்த நிலையில் தற்போது மீண்டும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள், கடந்த 11ஆம் திகதி முதல் கோரப்பட்டிருந்தன. எதிர்வரும் 25 ஆம் திகதி, விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதியாகுமென அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததெனத் தெரிவித்த சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய, கடந்த ஒருவாரகாலத்துக்குள் எவ்விதமான விண்ணப்பங்களும் கிடைக்கவில்லை என்றார்.
அலுக்கோசு பதவிக்காக, விண்ணப்பங்களை அனுப்புபவர். ஆணாகவும் 18-45 வயதுக்கிடைப்பட்டவராகவும் இருக்கவேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன்,  கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சையில் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடிக்கொருதடவை பிரஸ்தாபித்து வருகின்றார். இந்நிலையிலேயே, அலுகோசு பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
இதனிடையே இலங்கை படைகளிலிருந்து இதற்கு ஆட்சேர்ப்பு செய்வது பொருத்தமானதென ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.




No comments