பசில் கம்பம்பில மோதல்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒருங்கிணைப்பாளரான பஸில் ராஜபக்சவுக்கும், உதயகம்மன்பில எம்.பிக்குமிடையில் கடும் சொற்போர் மூண்டுள்ளது. இதனால் மஹிந்த அணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.


மஹிந்த ஆதரவு அணியிலுள்ள பங்காளிக்கட்சி தலைவர்களுக்கான கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில், விஜேராம மாவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

புதிய அரசியல் கூட்டணி, உள்ளாட்சி சபைகளின் செயற்பாடு, மாகாணசபைத் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடப்படும்வேளை,உதயகம்மன்பில எம்.பியே சர்ச்சைக்கு பிள்ளையார்சுழி போட்டார்.

” உள்ளாட்சிசபைகளில் வெற்றிடம்ஏற்பட்டால் அந்த இடத்துக்கு புதியவர் ஒருவரை நியமிப்பதற்கு சரியான வேலைத்திட்டமொன்று உருவாக்கப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்காலத்தில் அது பிரச்சினைக்கு வழிவகுக்ககூடும்.” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச,

” அப்படியானால், வெற்றிடம் ஏற்படும்பட்சத்தில், அவர் அங்கம் வகித்த கட்சியின் உறுப்பினர் ஒருவரே அந்த இடத்துக்கு நியமிக்கப்படவேண்டும்.” என்று கூறினார்.

” பொரலஸ்கமுவ பிரதேச சபைக்கான தேர்தலில் எமது கட்சி ( தூய ஹெல உறுமய) போட்டியிடவில்லை.  பட்டியல் ஊடாக நியமனம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தபின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கும் எமது தரப்பில் இருந்து ஒருவர் உள்வாங்கப்படவில்லை.” என்று கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

இதன்போது குறுக்கிட்ட பஸில் ராஜபக்ச, கம்மன்பிலவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

இதனால் கடுப்பாகிய உதயகம்மன்பில,  ” நீங்கள் அவ்வாறு கதைக்கவேண்டாம். நீதியாக பேசி பழகுங்கள்.” – என பஸிலிடம் கோரினார்.

” உதய, உங்களின் தேவை, விருப்பங்களுக்கமைய எம்மால் வேலைசெய்யமுடியாது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எமக்கே உரித்துடைய கட்சி. எமது தேவைக்கேற்பதான் வேலைகள் நடைபெறவேண்டும். ” என பஸில் இடித்துரைத்தார்.

” உங்கள் தாளத்திற்கேற்ப எம்மால் ஆடமுடியாது. மஹிந்த ராஜபக்சவால்தான் நாம் இந்த கூட்டணியில் இருக்கின்றோம். அவர் இல்லாவிட்டால், தாமரை மொட்டில் தேர்தலில் போட்டியிட்டிருக்கவும் மாட்டோம்.” என்று கடுந்தொனியில் பதிலடி கொடுத்தார் கம்மன்பில.

இவ்வாறு இருவருக்குமிடையில் சொற்போர் மூண்டதால், குறுக்கிட்ட மஹிந்த, ” தனித்து போட்டியிட்டிருந்தால் ஆசனம் கிடைத்திருக்காதுதானே…” என்று குறிப்பிட்டார்.

” மைத்திரி குணரட்னவின் கட்சிக்குகூட 21 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அந்த கட்சியைவிட நாம் பலவீனமானவர்கள் என்றா நினைத்தீர்கள்?” என்று மஹிந்தவிடம் வினா எழுப்பினார் உதய.

பதிலுக்கு பஸிலும் பதிலடிகொடுக்க கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரையும் அமைதிகாக்குமாறு மஹிந்தவிடமிருந்து கடுந்தொனியில் கட்டளை பறந்தது. அதன்பின்னர் ஏனைய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

No comments