சுமந்திரன் மிரட்டல் - மாநகர உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் அருள்குமரன் ?


தமிழரசுக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் அருள்குமரனை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யுமாறு சுமந்திரனால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவந்த நிலையில் அவர் தனது பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகரசபை உறுப்பினரான அருள்குமரன் சபையில் நடுநிலைத் தன்மையுடன் நடந்துகொள்வதோடு சுமந்திரனின் தூண்டுதலில் யாழ் மாநகர முதல்வர் ஆர்னோட் மேற்கொள்ளும் தான்தோன்றித் தனமான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்காது அவற்றின் தவறுகளை சபையில் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிவந்துள்ளார்.

கடந்த வரவு செலவுத்திட்டத்திலும் தவறுகளைச் சுட்டிக்காட்டியதோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் வரவு செலவுத்திட்டத்தில் சமர்ப்பித்த திருத்தங்களுக்கு ஆதரவும் வழங்கியிருந்தார். இதன் பின்னணியிலேயே அவரைப் பதவி விலகிச் செல்லுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்திருந்த அருள்குமரன்  பதவி உயர்வுடன் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். இதனைத் தமக்குச் சாதகமாகக் கருதிய சுமந்திரன்-ஆர்னோல்ட் அணியினர் நீர் வார நாட்களில் கிழக்கு மாகாணத்தில் இருந்தால் உமது தொகுதியில் எமது கட்சி செல்வாக்கினை இழந்துவிடும் எனவே உமது பதவியை இராஜனாமாச் செய்து அதனை வேறு ஒருவருக்கு வழங்கும் என தொடர்ச்சியாக அழுத்தம் பிரயோகித்துள்ளனர்.

இந்நிலையிலேயே கட்சியுடன் பகை முரண்பாட்டை வளர்க்க விரும்பாது அருள்குமரன் பதவி விலகிச் செல்ல தீர்மானித்துள்ளார்.

இந்நிலையில் அருள்குமரன் இவ்வாறு கட்டாய வற்புறுத்தலில் பதவி விலகிச் செல்வதை ஏற்க முடியாது எனக் கூறியிருக்கும் சக உறுப்பினரான சுபதீஸ் அருள்குமரனுக்கு ஆதரவாக தாம் குரல்கொடுக்கப்போவதாகவும் அருள்குமரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் கட்சிக்கு எதிராக தாமும் செயற்படவேண்டிவரும் என கூறியிருக்கிறார்.

No comments