சமரசம் செய்யலாமென்கிறார் பிக்கு?
முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள
சட்டவிரோத விகாரை தொடர்பில் சுமுகமாக தீர்வை ஏற்படுத்த விரும்பவதாகவும்,
சுமுகமாக தீர்வை ஏற்படுத்த வழியுள்ளதாகவும் விகாராதிபதி இன்று முல்லைத்தீவு
நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
விகாரைக்கான அனுமதி தொடர்பில், விகாராதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட
ஆவணங்கள் தொடர்பாக, தெரிவிக்கப்பட்ட ஆட்சேபணைகளையடுத்தே விகாராதிபதி
இவ்வாறு தெரிவித்தார்.
முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில்,
புத்தர்சிலை அமைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் (24) இன்று
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில், நீதிபதி லெனின் குமாரின்
முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
விகாராதிபதி, பிள்ளையார் ஆலய நிர்வாகம் என இரு தரப்பினரும் இன்று
மன்றில் முன்னிலையாகினர். பிள்ளையார் ஆலய நிர்வாகத்தின் சார்பில் மூத்த
சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் 13 சட்டத்தரணிகள்
முன்னிலையாகியிருந்தனர்.
வழக்கு விசாரணை முடிந்ததன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்க
மறுத்துவிட்டார் விகாராதிபதி. பிள்ளையார் ஆலய நிர்வாகம் சார்பில்
முன்னிலையான சட்டத்தரணிகளிடம் கேளுங்கள் என்றுவிட்டு சென்றுவிட்டார்.
நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகம் சார்பில் முன்னிலையாக மூத்த
சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம், வழக்கு விசாரணைகள் குறித்து
விளக்கமளித்தார்.
“முதலாம் தரப்பான பௌத்த பிக்குவின் சார்பில், வர்த்தமானி அறிவித்தல்
ஒன்றில் குறித்த இடத்தினை தொல்பொருள் திணைக்களத்திற்குரிய பிரதேசமாக
அறிவித்ததாக தொல்பொருள் திணைக்களத்தின் ஒரு ஆவணத்தினையும், அங்கு
கட்டடங்களைக் கட்டுவதற்கு அனுமதி வழங்கியமைக்கான ஒரு ஆவணத்தினையும்
சமர்ப்பித்தார்கள்.
அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறித்த இடத்தின் பெயர் செட்டிமலை எனவும்,
செட்டிமலைக் கிராமம், செட்டிமலை கிராமசேவகர் பிரிவெனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு நாம் ஆட்சேபணை தெரிவித்தோம். அவ்வாறானதொரு இடம் இல்லை,
தொல்பொருள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அனுமதிக் கடிதத்திலே எந்தப்
பிரதேசம், எந்த இடம், எவ்வளவு விஸ்தீரணம் என்பதும் குறிப்பிடப்படவில்லை,
எனவே இதற்கு நாங்கள் கடுமையான ஆட்சேபனை தெரிவிப்பதாக கூறினோம்.
இதனையடுத்து பெளத்த விகாராதிபதி இவ்விடயத்தினை சுமூகமாக தீர்ப்பதற்கு
சாத்தியக்கூறு இருப்பதாகவும், சுமூகமாக தீர்க்க விரும்புவதாகவும் கூறிய
அடிப்படையில் நீதிமன்றம், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தை
அடுத்த தவணை மன்றில் முன்னிலையாகுமாறு பணித்தது.
வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரையில் அந்த பிரதேசத்தில் முதலாம்
பகுதியினரோ, அல்லது இரண்டாம் பகுதியினரோ எந்தவிதமான அபிவிருத்தி வேலைகளோ
செய்யக்கூடாதெனவும் உத்தரவிட்டுள்ளது.
பிக்குவுக்கு சார்பாக பொலிசார் செயற்படுகின்றனர் என நாம் மன்றுக்கு
சுட்டிக்காட்டியிருந்தோம். அதை மன்று ஏற்றுக்கொண்டு பொலிசாருக்கு
எச்சரிக்கை விடுத்திருந்தது .
பிணக்குக்குரிய
இடத்திலுள்ள ஆலயம் மற்றும் விகாரை தொடர்பாக ஒரு சமாதானமான தீர்வு
எட்டமுடியுமா என ஆராய்வதற்கும், தேவை ஏற்படின் இரண்டாம் தரப்பான நீராவிப்
பிள்ளையார் கோவில் சார்பாக தெரியப்பட்டவர்களின் காரணங்களை முன்வைப்பதற்கும்
நீதிமன்று தவணை வழங்கியுள்ளது என்றார்

Post a Comment