மைத்திரியுடன் புத்தரும் முல்லை வந்தார்?
மைத்திரியின் வருகையினையடுத்து முல்லைத்தீவு பழைய செம்மலை விநாயகர் ஆலயத்துள் அமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலை அவசரமாக அவசரமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு செம்மலையில் நீதிமன்ற உத்தரவை மீறி சைவ ஆலயம் அமைந்துள்ள இடத்தில் பாரிய புத்தர் சிலை நிறுவப்பட்டுவருகின்றமை தொடர்பில் தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டு வந்திருந்தனர்.

செம்மலை - நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்திலேயே பௌத்த பிக்கு ஒருவரால் இந்த சட்டவிரோத செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளமை, தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் கீழுள்ள நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் 2009-ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இராணுவத்தினர் முகாம் ஒன்றை நிறுவியுள்ளனர்.

இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டில் இருந்து இராணுவத்தின் பாதுகாப்பில் ஆலயத்திற்கு அருகில் வசித்துவரும் கொலம்ப மேதாலங்க தேரர் என்ற பௌத்த பிக்கு, ஆலய வளாகத்தில் விகாரையொன்றை நிறுவும் முயற்சியை முன்னெடுத்திருந்தார்.

இராணுவத்தின் உதவியுடன் கொலம்ப மேதாலங்க தேரர் தலைமையில் இந்த பௌத்த விகாரையை நிறுவும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

எனினும் விகாரை அமைக்கும் நடவடிக்கைகளுக்கு பிரதேச சபை, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆலய நிர்வாகம் ஆகியன ஏற்கனவே தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருந்த விகாரையின் கட்டுமாணப் பணிகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தது.

No comments