கூட்டத்திற்கு வருமாறு 5 ஆயிரம் பேரிற்கு அழைப்பிதழ் அனுப்பிய சுமந்திரன்

தமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று மாலை ஆரம்பமாகி இடம்பெற்றது.

குறித்த நிகழ்விற்கு வருகைதருமாறு வாக்காளர் பதிவு விபர ஏட்டினூடாக முகவரிகள் பெறப்பட்டு  ஐந்து ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்பு சலுகையின் அடிப்படையில் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அழைப்பாக இலவச அரச அஞ்சல் சேவை ஊடாக யாழ் மாவட்டத்திலுள்ள பலரின் வீடுகளுக்கு  குறித்த நிகழ்விற்கான அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்டாயம் பங்குபற்றவேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் எனினும் ரெலோ மற்றும் புளொட் உறுப்பினர்கள் தம்மை இவ்வாறு சுமந்திரனின் கூட்டத்திற்கு நிர்பந்திக்க முடியாது என மறுத்துவிட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டள்ளனர்.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிவில் சமூக பிரதிநிதிகளின் வாதங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலுரையாற்றியிருந்தார்.

எனினும் மக்கள் சுமந்திரனிடம் நேரடியாக கேள்விகள் தொடுப்பதற்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டிருந்தது.

No comments