அரசமைப்பு நிறைவேறாவிட்டால் எதிரானவர்கள் தலைதூக்கிவிடுவர் - சுமந்திரன்

“வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும். அவர்களுக்குப் பிரச்சினை இல்லையென நினைக்காதீர்கள். இது முக்கியமா என்று கேட்பதும் பிழை. புதிய அரசமைப்பை எங்களால் செய்ய முடியாமல் போனால் எமக்கெதிரான சக்திகள் தலைதூக்கும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“விடுதலைப்புலிகளை தோல்வியடையச் செய்கின்றோம் என்ற பெயரில் மஹிந்த அரசால் தமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்டனர். தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை வெறுப்பதற்கு அதுவும் காரணம்.

விடுதலைப்புலிகள் ‘பயங்கரவாதிகள்’ என்றால் அவர்களை அழிக்க அரசு நடந்துகொண்ட முறையும் ஒருவித பயங்கரவாதம்தான்.

புதிய அரசமைப்பு வராது. நீங்கள் வீணாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எங்கள் தரப்பில் என் மீது விமர்சனங்கள் செய்கின்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வந்தாக வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.

ஒற்றையாட்சி என்றால் ஓர் இடத்தில் ஆட்சி நிர்வாகம் இருக்கும். அப்படியானால் எப்படி நீங்கள் அதிகாரத்தைப் பகிர்வீர்கள்?

நாட்டைப் பிரிக்காமல் ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரத்தைப் பகிருங்கள். அதையே கூறுகின்றோம்.

ஒருமித்த நாடு அல்லது ஒன்றுபட்ட நாடு என்று கூறலாம் என்று நான் யோசனை முன்மொழிந்தேன். அதில் ஒருமித்த நாடு என்று குறிப்பிடுவது நல்லதெனத் தீர்மானித்தார்கள்.

தெற்கில் மட்டுமல்ல வடக்கிலும் இது புரியாமல் உள்ளது. சமஷ்டி இல்லையென ரெலோ என்ற எங்களின் பங்காளிக் கட்சி கூட எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

நாட்டைப் பிரிக்கக் கூடாது. அந்தச் சிந்தனை இருக்கக் கூடாதென நான் மக்களிடம் சொல்கிறேன். இதை சில வருடங்களுக்கு முன்னர் நான் யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தால் பின்னர் எப்படி திரும்பி வந்திருப்பேன்? மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும்.

அரசமைப்பு என்பது சமூக ஒப்பந்தம். அதனால்தான் அனைவரினதும் இணக்கம் இதற்குத் தேவையெனக் கருதப்படுகிறது.

இவ்வளவு பிரச்சினைகள் உயிரிழப்புக்கள், சேதங்களுக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு மக்கள் இன்னமும் ஏன் சமஷ்டி கட்சிக்கு (இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு) ஆதரவளிக்கின்றார்கள்? அவர்களுக்கு அரசியல் தீர்வு தேவை .

அவர்களுக்கு பிரச்சினை இல்லையென நினைக்காதீர்கள். இது முக்கியமா என்று கேட்பதும் பிழை. புதிய அரசமைப்பை எங்களால் செய்ய முடியாமல் போனால் எமக்கெதிரான சக்திகள் தலைதூக்கும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments