நந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு!


புதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர். புதிய அரசியல் யாப்பின் மூலம் அதிகாரப்பரவலாக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் பெரும்பான்மை சிங்கள மக்களின் விரும்பங்களுக்கு மாறாக அரசாங்கம் செயற்பட முடியாதெனவும் மகாநாயக்கத் தேரர்கள் கூறியுள்ளனர். இலங்கை அரசாங்க உயர்மட்டத்திடம் மகாநாயக்கத் தேரர்கள் இவ்வாறு கூறியதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சமீபத்தில் சந்தித்தபோதும் மகாநாயக்கத் தேரர்கள் இவ்வாறு வலியுறுத்திருந்தனர். ஒற்றையாட்சியும் பௌத்த சமய முன்னுரிமையையும் மேலும் உறுதிப்படுத்துமாறும் மகாநாயக்கத் தேரர்கள் கூறியுள்ளனர். 

இதேவேளை, மைத்திரிபால சிறிசேன, ரணில் ஆகியோர் புதிய அரசியல் யாப்புக்கான வழிநடத்தல் குழுவில் இருந்து விலகுமாறு மகாநாயக்கத் தேரர்கள் கோரிக்கை விடுக்க வேண்டுமென தேசிய இணக்க சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
பௌத்த குருமாரை மையமாகக் கொண்ட இந்தச் சம்மேளனம் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களிடங்களின் மகாநாயக்கத் தேரர்களை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்து உரையாடியுள்ளது.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தைச் சேர்ந்த குணதாச அமரசேகர, தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தைச் சேர்ந்த அட்மிரல் சரத் வீரசேகர. பிக்குமாரை உள்ளடக்கிய பிரதான செயற்பாட்டாளர் வசந்த பண்டார ஆகியோர் உள்ளிட்ட பலர் மகாநாயக்கத் தேரர்களை சந்தித்து உரையாடியிருந்தனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிட்டன.

இறுதியாக முள்ளிவாய்க்கால், நந்திக்கடலில் இடம்பெற்ற போர்தான் தமிழர்களுக்கான இறுதித் தீர்வு என்று தேசிய இணக்க சம்மேளனம் மகாநாயக்கத் தேரர்களிடம் எடுத்துக் கூறியுள்ளது.

இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பது இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் அல்ல. மாறாக சர்வதேச நாடுகள் கொண்டு வரும் தீர்வுக்கான ஏற்பாடுகள்தான் அவை.

அந்த அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்புடன் செய்துகொண்ட உடன்படிக்கைதான் புதிய அரசியல் யாப்பு முயற்சிகள்.

சிறீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சிறிய கட்சிகளும் அதற்கு ஆதரவு வழங்குகின்றன.

ஆகவே இலங்கையில் 72 வீதமாகவுள்ள சிங்கள மக்களின் கருத்துக்கள், விருப்பங்களுக்கு ஏற்ப இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும். அதற்கு ஏற்ப மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்த வேண்டுமென தேசிய இணக்க சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, புதிய அரசியல் யாப்பைக் கைவிட வேண்டும் என மகாநாயக்கத் தேரர்கள் எழுத்து மூலமாகவும் அதிகாரபூர்வமாகவும் இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புதிய அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்த முடியாதென ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ளார். அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்ய முடியாதெனவும் அவர் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச தரப்பும் புதிய அரசியல் யாப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அதேவேளை, அதிகாரப்பகிர்வு அல்ல, அதிகாரப் பங்கீட்டோடு கூடிய சுயாட்சிதான் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என தமிழ் மக்கள் பேரவை இலங்கை அரசாங்கத்திடம் கையளித்திருந்த நகல் வரைபில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புதிய அரசியல் யாப்பு ஒற்றையாட்சித் தன்மை கொண்டது என்றும் இனப்பிரச்சினைக்குரிய தீர்வுகள் எதுவுமே அதில் இல்லையெனவும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த அனைத்து தமிழ்க் கட்சிகளும் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments