முளைத்தது மேலுமொன்று?

ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல்,கல்வி,பொருளாதார, கலாசார,சுகாதார,சமூக உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் நேற்றைய தினம்  யாழில் புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
“மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி” எனும் பெயரில் மேற்படி கட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு   யாழ்.நகரிலுள்ள றிம்பர் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி, கிருஸ்ணராசா கோவிந்தராசன், கார்த்திகேசு கதிர்காமநாதன், மாணிக்கம் லோகசிங்கம், கதிரவேலு மதன கோணகிருஷ்ணன் ஆகியோர்ன்  கூட்டுத் தலைமையில் குறித்த கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் இணைத்தலைவர்களில் ஒருவரான மாணிக்கம் லோகசிங்கம் தலைமையில்  அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நலிவடைந்த அல்லது அரசியல் ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டுள்ள சமூகத்தின் கல்வி,பொருளாதார, கலாசார, சுகாதார, வாழ்வாதார மேம்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக அரசியல் அதிகாரம்,அரசியல் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தும் பொருட்டு “மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி” கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக  கட்சியின் இணைத்தலைவர்களில் ஒருவரான சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி தெரிவித்துள்ளார்.

அதோடு யாழ்.மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ள “மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி” காலப் போக்கில் தேசிய ரீதியாக செயற்படுவதற்கான அபிலாசைகளைக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ்மக்களின் தலைமைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கிஞ்சித்தும் அக்கறை காட்டுவதில்லை என கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அனைவரும் குறிப்பிட்டனர்.
எனவே, எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க அரசியல் நீரோட்டத்தில் இணைவதே ஒரே வழி எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

No comments