அரசாங்கத்திலிருந்து விலகப்போவதாக மனோ அணி எச்சரிக்கை

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வுக்கு இணங்காவிடின், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி எச்சரித்துள்ளது.

தோட்டத்தொழிலாளர்களுக்கான ஊதியத்தை குறைந்தபட்சம் 150 ரூபாவினால் அதிகரிக்காவிடின், அரசாங்கத்தில் இருந்து விலகுவோம் என்று, தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

”நாங்கள் எமது நிலைப்பாட்டை  ஏற்கனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம்.

அவர் உங்களையும்,  அமைச்சர்கள் நவீன் திசநாயக்க மற்றும் ரவீந்திர சமரவீர ஆகியோரையும் சந்திக்க அழைத்துள்ளார்.

நாளை நடக்கவுள்ள பிரதமருடனான சந்திப்பின் பின்னர் எமது முடிவை எடுப்போம்.

சரியான தீர்வு கிடைக்காவிட்டால் அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பெரும்பான்மை பலம் இல்லாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இந்த எச்சரிக்கை, ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

No comments