பணிப்பாளராக கடற்படை அதிகாரி - சுங்க அதிகாரிகள் போர்க்கொடி

சுங்கப் பணிப்பாளராக முன்னாள் சிறிலங்கா கடற்படை அதிகாரியை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுங்கத் திணைக்கள அதிகாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் சுங்க அதிகாரிகள்   தவிர, ஏனைய சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அனைவரும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக இருந்த, முன்னாள் மட்டக்களப்பு மாவட்டச் செயலர் பி.எம்.எஸ் சாள்ஸ்சுக்கு பதிலாக, ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி றியர் அட்மிரல் சாமல் பெர்னான்டோவை நியமிப்பதற்கு நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு சுங்கத் திணைக்கள அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

புதிய பணிப்பாளரின் கீழ் பணியாற்ற முடியாது என்று அறிவித்துள்ள அவர்கள், இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சிவில் அரச திணைக்களங்கள், நிறுவனங்களின் தலைவர்களாக படை அதிகாரிகளை நியமிப்பதற்கு தடை விதிக்கும் வகையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே பிறப்பித்திருந்த உத்தரவையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நியமனத்தில், கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசியல்  தலையீடுகள் இருப்பதாகவும், இந்தப் பதவிக்கு சிறிலங்கா நிர்வாக சேவை அல்லது சுங்க சேவையின் சிறப்பு பதவி நிலை அதிகாரியே நியமிக்கப்பட வேண்டும் என்றும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால், கொழும்பு உள்ளிட்ட துறைமுகங்களின் பணிகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments