எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த தெரிவு

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவே செயற்படுவார் என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று (08) சபையில் அறிவித்தார்.

2019ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடியது.

பொதுநலவாய நாடாளுமன்ற ஒன்றியத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக சபாநாயகர் கரு ஜயசூரிய வெளிநாடு சென்றிருப்பதால், பிரதி சபாநாயகர் தலைமையிலேயே சபை கூடியது.

இதன்போது சபாநாயகர் அறிவிப்பு வேளையிலேயே சபாநாயகரின் மேற்படி தீர்மானத்தை அவைக்கு அறிவித்தார் பிரதி சபாநாயகர்.

“ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக கூடுதல் ஆசனங்களைக் கொண்டுள்ள கட்சிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவேண்டும்.

அந்தவகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் எதிர்க்கட்சித் தலைவராக முன்மொழியப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார்” என்றும் பிரதி சபாநாயகர் கூறினார்.

அத்துடன், எதிர்க்கட்சி பிரதம கொறடாவாக மஹிந்த அமரவீர செயற்படுவார்.

இன்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷ சபை அமர்வில் பங்கேற்று, எதிர்க்கட்சிப் பக்கத்தில் முன்வரிசையில், எதிர்க்கட்சித் தலைவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தார்.

No comments