ரணில் எதனையும் செய்யப்போவதில்லை:சுரேஸ்!


அரசியல் நெருக்கடியில் தத்தளித்த இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தை தாங்கிப் பிடித்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு முழுமையான ஆதரவை வழங்கி அவர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களது உரிமைகளைப் பெற்றுக்கொடுக்காவிட்டால், பின்னர் ஒருபோதும் அவர்களால் அதனைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்;. 

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலார்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சில விடயங்களைக் கூறியிருந்ததாக சுட்டிக்காட்டிய சுரேஸ்பிரேமச்சந்திரன்,அதில் முக்கிய விடயமாக இலங்கையில் 50 நாட்களுக்கும் மேலாக நிலவிய அரசியல் நெருக்கடியின் போது ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாத்ததற்கான காரணங்கள், மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக கொண்டுவந்தமைக்கான காரணங்கள் என பல விடயங்களை அவர் பேசியமையை குறிப்பிட்டார்.

தேசிய அரசாங்கத்தை மகிந்த ராஜபக்ச குழப்பும் நோக்குடன் செயற்பட்ட காரணத்தினாலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டியிருந்ததாகவும், ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டிய தேவை இருந்ததன் அடிப்படையில் நீதிமன்றம் வரை சென்று ஐ.தே.கவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்தோம் என சுமந்திரன் குறிப்பிட்டதாக இதன்போது சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்களது வாக்குகளால் மைத்திரி – ரணில் அரசாங்கம் ஆட்சியமைத்த காலத்திலிருந்து இரா.சம்மந்தன், எம்.ஏ.சுமந்திரன் போன்றோர் இது ஒரு தேசிய அரசாங்கம் எனவும், இரண்டு கட்சிகள் இணைந்து அமைத்துள்ள அரசாங்கம் எனவும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்ற அரசாங்கம் எனவும், புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டுவருவதாக இருந்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை.

ஆகவே இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் நழுவ விடக்கூடாது. இந்த சந்தரப்பத்தில் நாங்கள் சில விட்டுக்கொடுப்புக்களையாவது செய்து இந்த அரசியல் சாசனத்தைக் கொண்டுவர வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் இப்போது ஒரு விடயம் தெளிவாகின்றது.

இவ்வளவு பிரச்சனைகளுக்கும் மூல காரணம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இப்போது அவரது தரப்பு ஒட்டுமொத்தமாக இந்த தேசிய அரசாங்கத்திலிருந்து விலகியிருக்கின்றது. தற்போது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காது என்பது நிரூபணமாகியிருக்கின்றது.

அரசியல் சாசனத்தைக் கொண்டுவருவோம் என்பது ஒரு பக்கத்தில் தாங்கள் சொல்லுகின்ற அனைத்தையும் தமிழ் மக்கள் கேட்பார்கள் என்ற யோசனையா? அல்லது சுதந்திரக் கட்சியில் உள்ளவர்களை ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் கொண்டுவந்துவிடலாம் என்ற யோசனையா? என்பது தெரியவில்லை.

ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற விடயத்தை எடுத்துக்கொள்வது கடினம் என்பது மாத்திரமல்ல இதுவரை காலமும் சொல்லி வந்த ஒருமித்த நாடு என்ற விடயமும் ஏக்கிய இராஜ்ய என்பதற்கு இப்போதும் ரணில் விக்கிரமசிங்க தென்பகுதியில் பேசும்போது மூன்று மொழிகளிலும் அது ஒற்றையாட்சி என்பதாகவே இருக்கும் என தெளிவாக கூறியிருக்கின்றார்.

நாடாளுமன்ற முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவும் ஒற்றையாட்சியே இருக்கும் எனவும் அதற்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்று கூறியிருக்கின்றார்.

ஆகவே இங்கு அடிப்படையில் ஒற்றையாட்சி என்பது மாறப்போவதில்லை. பௌத்தத்திற்கு முதலிடம் என்பது மாறப்போவதில்லை வடகிழக்கு இணைக்கப்படமாட்டாது.

ஆகவே இவர்களுடைய புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பார்களா என்றால் அது கேள்விதான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லாவிட்டால் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக வர முடியாது. இந்த அரசாங்கத்தைக் கவிழ விடாமல் பாதுகாப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான்.


ஆகவே இவர்களுடைய காலத்தில் குறைந்தபட்சம் செய்யக்கூடிய காரியங்கள் என்னென்ன இருக்கின்றதோ அதை செய்யாவிட்டால் பிறகு எப்போதும் இவர்களால் அதை செய்ய முடியாது.


அரசியல் சாசனம் என்பது இங்கே நிச்சயமாக வரப்போவது கிடையாது. 2019 ஆம் ஆண்டு தேர்தலுக்குரிய ஆண்டு. தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்படுமாக இருந்தால் அது சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பிரசாரத்திற்கு வழிவகுக்கும்.


ஆகவே ரணில் விக்கரமசிங்க அதனை செய்யப்போவது கிடையாது என்பதே உண்மை என சுரேஸ் பிரேமச்சந்திரன குறிப்பிட்டார்.

No comments