அரசிற்கு மேலுமொரு மாதம் அவகாசம்!


தமது பூர்விக காணிகளில் அமைக்கப்பட்டுள்ள கேப்பாபுலவு முகாமுக்குள் அடாத்தாக நுழைய முற்ப்பட்ட மக்கள் இன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.காவல்துறை குவிக்கப்பட்டு பதற்ற நிலையின் மத்தியில் அரச அதிகாரிகளின் உறுதிமொழியினையடுத்து ஒருமாத அவகாசம் வழங்கி மக்கள் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கேப்பாபுலவு மக்கள் தமது பூர்வீக காணிகளில் அடாத்தாக அமைக்கப்பட்ட இராணுவ முகாமை அகற்றி தம்மை தமது சொந்த பூமியில் குடியமர்த்துமாறு கோரி கடந்த 2017.03.01 அன்று ஆரம்பித்த தொடர் போராட்டமானது 671 ஆவது நாளாக இன்றும் கேப்பாபுலவு இராணுவ தலைமையகம் முன்பாக இடம்பெற்றுவருகிறது.

இந்நிலையில் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் டிசம்பர் 31 க்குள் விடுவிக்கப்படும் என்ற உறுதிமொழி பொய்த்துப்போன நிலையில் இன்றைய தினம் மக்கள் தமது காணிக்குள் தாமாக செல்வதாக தெரிவித்து உடமைகளுடன் சென்றபோது இராணுவ வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர் 

இதனை தொடர்ந்து குறித்த முகாம் வாயிலில் மக்கள் கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் முகாமுக்குள் நுழைய முற்ப்பட்டதும் சுமார் 150 வரையான போலீசார் கொண்டுவரப்பட்டு இராணுவ முகாம் வாயில்களில் நிறுத்தப்பட்டனர் இதனைதொடர்ந்து குறித்த இடத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த அரச அதிகாரிகள் மக்களது கருத்துக்களை கேட்டறிந்து குறித்த விடயத்தை தாங்கள் அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசென்று ஜனவரி 25 ம் திகதிக்குள் உரிய பதிலை பெற்று தருவதாகவும் அதுவரை போராட்டத்தை நிறுத்துமாறும் கோரினர.;; அவர்களது கருத்துக்கமைய வரும் ஜனவரி 25 ம் திகதி வரை தாம் போராட்டம் நடாத்துமிடத்தில் தொடர்ந்து போராடுவதாகவும் 25 ம் திகதிவரை தீர்வுகள் எதுவும் கிடைக்காவிட்டால் தமது காணிகளுள் நுழைவது தவிர்க்கப்படமுடியாதெனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments