ரணில் ஏமாற்றுகின்றாரா? தவராசா கேள்வி?

இலங்கையின் புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில்; உண்மையைக் கூறுவதுக்கு அரசியல் தலைமைகளும் புத்திஜீவிகளும் முன்வரவேண்டுமென வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா அழைப்புவிடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது புதிய அரசமைப்பு உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் வெளியாகும் கருத்துக்கள் தெற்கிலும் வடக்கிலும் வேறுபட்டதாக இருக்கின்றன. அதிலும் அரசியல் தலைவர்களும் முன்னுக்குப் பின் முரணாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதாவது ஒற்றையாட்சி என்றும் ஒருமித்த நாடென்றும் சமஸ்டி என்றும் கூறுகின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் வரைபில் ஒற்றையாட்சி அல்ல என்பதை கூறுகின்றேன். தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாகத் தீர்க்கக் கூடிய வரைபாக இல்லாவிட்டாலும் அதில் இன்னும் எமக்குத் தேவையான சில சில மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவைப்பாடுகள் இருக்கின்றன.

ஆகவே மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டியுள்ளது. ஆனால் அதன் உண்மையைச் சொல்வதற்கு புத்திஜீவிகளும், அரசியல் தலைமைகளும் தயங்குகின்றனர். குறிப்பாக ஆட்சியில் இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி கூட பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றது. அத்தோடு தெற்கிலும் வடக்கிலும் பல்வேறு கருத்துக்களும் வெளியிடப்படுகின்றன.

குறிப்பாக வந்திருக்கும்; வரைபு ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்டதாக இல்லாமல் சமஸ்டிக் குணாதிசயங்களைக் கொண்டதாக இருந்தாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துப்படி பௌத்தத்திற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒற்றையாட்சியிலான தீர்வே வருமென தெட்டத்தெளிவாக கூறியிருக்கின்றார்.

ஆகையினால் ஐக்கிய தேசியக் கட்சியினது ஆதரவு இல்லாமல் இந்த வரைபு வர முடியாது. ஆகவே வெளிவந்திருக்கும் வரைபில் உள்ளவாறு அரசமைப்பு வருமா என்றதும் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படுமா என்றதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியே இந்த வரைபை எதிர்ப்பது போன்று வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு மாறாக வேறு கருத்துக்களை முன்வைக்கின்ற போது இந்த வரைபு வருமென்று நாங்கள் எப்படி நம்ப முடியும். மக்களை ஏமாற்றுவதற்காக ரணில் விக்கிரமசிங்க இப்போது நாடகம் போடுகின்றாரா அல்லது அது தான் அவருடைய நிலைப்பாடா என்று கேள்வி எழுகிறது. ஆகவே இந்த அரசமைப்பு தொடர்பில் அரசியல் தலைவர்கள் மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டுமென்றார்.

No comments