ஜநாவை ஏமாற்றவே அரசின் நாடகம்?


பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம், அரசியல் கைதிகள் விடுதலை, பொது மக்கள் காணிகள் விடுவிப்பு, படையினரை வடக்கில் இருந்து நீக்குதல் என்று எத்தனையோ விடயங்களை இரணிலுக்கு உதவி தருவதற்கு முன் நிபந்தனையாக இட்டு சாதித்திருக்கலாம். இப்பொழுது யானைக்கு அடிசறுக்கியுள்ளது. அகங்காரத்திற்கு அடி கொடுக்கப்பட்டுள்ளது. சாணக்கியம் சறுக்கிப் போயுள்ளதென தெரிவித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.  

பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்கும், ஏக்கிய இராஜ்ய பதம் கொண்ட, வடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டி அற்ற, புதிய அரசியல் அமைப்பின் வரைவு பற்றி அவர் கருத்து வெளியிட்டுள்ளார். அரசியல் அமைப்பைத் திருத்துவதற்கு முக்கிய காரணம் தமிழ் மக்களின் பலவருட கால எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே என்பது எமது எண்ணம். 

ஆனால் இவ்வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் தமிழர் சம்பந்தமாக நாம் ஏதோ சில நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம் என்று ஜெனிவாவில் எடுத்துக் காட்டி மேலும் தவணை எடுக்க வேண்டியுள்ளது அரசாங்கத்திற்கு. எமது எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்வது அவர்களின் நோக்கமல்ல. ஜெனிவா பிரச்சினையில் இருந்து தப்பி விடவேண்டும் என்பதே அவர்களின் அதியுச்ச அவாவும் ஆசையும். தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் களைந்து அவர்களை நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார நீரோட்டத்தினுள் அணைத்துச் செல்வது அரசாங்கத்தின் நோக்காக இருந்திருந்தால் தொடக்கத்திலேயே தமிழ் மக்கள் ஏன் பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்க முன் வருகின்றார்கள் இல்லை, ஏன் ஏகிய இராஜ்யவுக்கு அவர்கள் எதிர், ஏன் வடகிழக்கு இணைப்பைக் கேட்கின்றார்கள், ஏன் சமஷ்டி முறையே சிறந்தது என்று கூறுகின்றார்கள் என்பதை அலசி ஆராய்ந்திருப்பார்கள். 

அது அவர்களின் நோக்கமன்று. சிங்கள ஏகாதிபத்தியத்தைக் காப்பாற்றி தமிழ் மக்களைத் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க என்ன செய்யலாம் என்பதே அவர்கள் குறிக்கோள். புதிய அரசியல் யாப்பு அதற்கான கண்துடைப்பு எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments