கூரே தான் வேண்டுமென்கிறார் சச்சி?


வட மாகாண ஆளுநரான ரெஜினோல்ட் கூரேயினை பதவி நீக்கவேண்டாமென இலங்கை ஜனாதிபதியிடம் மறவன்புலோ சச்சிதானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். ரெஜினோல்ட் கூரே இந்துக்களின் இனிய நண்பர். இந்துக்களின் நன்மைக்காக இலங்கை அரசிடம் கோரிக்கைகள் வைத்து நிறைவேற்றித் தருபவர் எனவும் இந்துக்கள் சார்பிலென அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டிலிருந்து மாகாணங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமிக்கவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திபாலசிறிசேன அறிவித்திருந்தார்.

இதற்கேதுவாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே  உள்ளிட்டவர்களை பதவிகளை ராஜினாமா செய்ய மைத்திரி கோரியிருந்தார்.

இந்நிலையில் ரெஜினோல்ட் கூரே ஆளுநர் பதவியில் தொடர்வார் என்ற நம்பிக்கையில் வடமாகாண இந்துக்கள் உள்ளனர்.அவ்வாறு அவரை மாற்றுவதற்கு நீங்கள் ஏதாவது ஆலோசனையில் இருந்தால் தயவுசெய்து கைவிடுமாறு இந்துக்கள் கோருகிறார்கள். போரின் அவலங்கள் அழிவுகள் இழப்புகள் இவற்றிலிருந்து மீட்கும் முயற்சிகளில் ரெஜினோல்ட் கூரே ஈடுபட்டுள்ளார்.

வடமாகாண வளர்ச்சியில் அவர் காட்டும் ஆர்வமும் அக்கறையும் அளப்பரியது. முதல்நிலை உணவு உற்பத்தியான வேளாண்மை மீன்பிடி வளர்ச்சியில் புதிய திட்டங்களைக் குறுகிய காலத்தில் வகுத்துள்ளார். ஞானத்தை நோக்கிய அறிவு வளர்ச்சியில் ஆர்வம் கொண்டு ஆசிரியர்களின் திறமைகளை ஊக்குவிக்கிறார்.

தொழில் வளர்ச்சியில் வடமாகாணம் மேலோங்கத் திட்டங்களை வகுத்துள்ளார்.

வேலைவாய்ப்பைப் பெருக்க முதலீடுகளை ஊக்குவிக்க ஐரோப்பா சென்று பல நாடுகளில் புலம்பெயர் தமிழர்களையும் செல்வந்தர்களையும் வல்லுனர்களையும் சந்தித்து அழைத்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுத்த ஆட்சி இல்லாத சூழலில் அவரே வடமாகாணத்தை ஆள்கிறார்.

ஆட்சி அலுவலர்களை முடுக்கி மக்கள் நலப் பணிகளை முன்னெடுக்கிறார். அவர் அங்கு இல்லையெனில் ஆட்சித் தொடர்ச்சி குறைந்துவிடும்.
வடமாகாண இந்துக்கள் தமது பாதுகாப்புக்கு அவரை நம்பி இருக்கிறார்கள். மக்களின் குறைகளைக் காது கொடுத்து கேட்கிறார். போக்கக் கூடியவற்றைப் போக்குகிறார். மக்களுக்கு ஆறுதல் சொல்கிறார்.

பொதுக்கூட்டங்களில் அவர் பேசும் தமிழின் இனிமையையும் உச்சரிப்பையும் எடுப்பையும் சொல்லாட்சியையும் கேட்கும் தமிழர் வியக்கின்றனர்.

தமிழ்ப் பாடல்களை இசைக்கருவிகளோடு இனிமையாகப் பாடுகிறார். தமிழ் மக்களின் இதயங்களைத் தொடுகிறார். ஆற்றல் மிக்க மாணவர்களை அழைத்துப் பாராட்டுகிறார். அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பரிசுகள் வழங்குகிறார், ஊக்குவிக்கிறார்.

அன்பால் ஆதரவால் இனிமையால் இன் முகத்தால் பேச்சால் செயலால் போருக்குப் பிந்தைய தமிழரின் அச்ச உணர்வை போக்கித் தனி மனித ஆளுமைகளை வளர்க்கிறார். அனைத்து அரசியல் கருத்துகளையும் சமமாகக் கொள்கிறார். அரசியல் கட்சிகளை ஒக்க நோக்குகிறார். அரசியல் சாராது பணியாற்றுகிறார்.

இந்துக்களுக்கும் புத்தர்களுக்கும் இடையே அண்மைக்கால உரசல்களும் அவநம்பிக்கைகளும் குறைவதற்கு மேதகு இரெசினால்டு கூரே அவர்களின் ஆளுமையும் கருத்தோட்டமும் பெரிதும் உதவுகின்றன. நல்லிணக்கம் மலர வாய்ப்புகள் அவரின் வழிகாட்டலில் உள.

இத்தகைய ஆற்றல் மிக்க திறமை மிக்க அரசியல் அநுபவம் மிக்க ஒருவரை எளிதில் வட மாகாணம் இழந்து விட முடியாது.


அவ்வகையில் வடமாகாண ஆளுநராக மேதகு இரெசினால்டு கூரே அவர்கள் தொடர ஆவன செய்யுமாறு வடமாகாண இந்துக்கள் சார்பில் கோருவதாக சிவசேனை அமைப்பாளர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

No comments