வடக்கு போக்குவரத்துச் சபை வெள்ளி முதல் பணிப்பகிஸ்கரிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

 வடபிராந்திய பிரதம முகாமையாளரை மாற்றுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் அந்த தொழிற்சங்கம் உரிய தரப்புளுக்கு அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

வடபிராந்திய பிரதம பிராந்திய முகாமையாரான கே. கேதீசன் இன்றைய காலத்தில் வடபிராந்திய சாலைகள் இழுத்து மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இயங்கிவருகின்றன.

ஏற்கனவே எம்மால் எழுத்து மூலமாக முன்வைக்கப்பட்ட பத்துக் குற்றச்சாட்டுக்களுக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கப்பெறாத காரணத்தினால் வட பிராந்திய தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடனும் வேதனையுடனும் தங்களது சேவையை ஆற்றி வருகின்றனர்.
இது வரை பொதுமக்களுக்கு அவர்களின் சேவைகள் பாதிக்கப்படாத வகையில் போராட்டங்கள் வட பிராந்திய பிரதம பிராந்திய முகாமையாளருக்கு எதிராக மேற்கொண்டோம். இன்று வரையில் அவற்றிற்கு தீர்வுகள் எவையும் கிடைக்கப்பெறவில்லை.
ஆனால் வேறு வழியின்றி வட பிராந்திய தொழிலாளர்களின் நன்மை கருதி கே.கேதீசனை வடக்கிலிருந்து வெளியேற்றித்தருமாறும் புதிய பிரதான பிராந்திய முகாமையாளராக வட பிராந்திய தொழிலாளர்களுடன் இணைந்து இ.போ.ச வைக் கட்டியெழுப்பக்கூடிய திறன் வாய்ந்த எஸ்.குலபாலச்செல்வத்தை நியமிக்குமாறு ஏழு சாலை ஊழியர்களின் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
எதிர்வரும் 3ஆம் திகதிக்குள் எமது கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்காவிட்டால் 4ஆம் திகதி முதல் வடபிராந்திய ஏழு சாலை தொழிற்சங்கங்கள் இணைந்து வட பிராந்திய ஏழு சாலைகளின் செயற்பாடுகளையும் முடக்கி மாபெரும் தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளோம் – என்றுள்ளது.

No comments