திண்டாடும் அரச அதிகாரிகள்?


இந்திய இந்துவின் பார்வையில்
கடந்த மாதம், 29ஆம், மற்றும் 30ஆம் நாள்களில்,  சிறிலங்கா நாடாளுமன்றம் இரண்டு பிரேரணைகளை நிறைவேற்றியது. அதாவது பிரதமர் அலுவலகம், அமைச்சரவை மற்றும் மகிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழுள்ள அனைத்து அமைச்சுக்களுக்குமான நிதி வழங்கலை தடுக்குமாறு கோரியே இப்பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.
‘இப்பிரேரணைகளுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்குமிடத்து இதனை அமைச்சின் செயலர்கள் தமது கவனத்தில் எடுக்க வேண்டும்’ என மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
எதுஎவ்வாறிருப்பினும், இது நாட்டை ஆள்வதற்கான நியாயமான முறைமையாக இருக்க முடியாது. குறிப்பாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இன்னமும் தமக்கான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையிலுள்ளது.
‘அமைச்சர்கள்’ கட்டளைகளை மேற்கொண்டாலும் கூட இவற்றை தமது செயலாளர்களே நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
‘போர்க் காலத்திலும் கூட நாங்கள் தந்திரமாக செயற்படவில்லை. நாங்கள் ஒருபோதும் தந்திரமான சாய்வாளராக இருந்ததில்லை’ என ஒரு அமைச்சை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ‘அரசாங்க அதிகாரிகள் என்ற வகையில் நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறோம். ஆனால் அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் ஏற்படும் போது நாம் மிகக் கடினமான தீர்வை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறோம்’ என தனது பெயரை வெளியிட விரும்பாத மூத்த அதிகாரி குறிப்பிட்டார்.
சிறிலங்காவின் பொதுச் சேவை அதிகாரிகள் நாட்டின் மத்திய மற்றும் மாகாண அதிகாரிகளாகப் பணியாற்றுவதற்காக சிறிலங்கா நிர்வாக சேவைப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர்.
ஓய்வுபெற்ற பொதுச் சேவை அதிகாரியான தேவநேசன் நேசையா அண்மையில் நாட்டின் உயர் தேசிய விருதுகளில் ஒன்றான ‘தேசமன்ய’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை நாட்டின் பொதுச்சேவைக்கான உயரிய மதிப்பாக நோக்கப்பட்டது.
இந்நிலையில் ‘நாட்டின் அரசியலில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தங்களால் எனக்கு வழங்கப்பட்ட ‘தேசமன்ய’ என்கின்ற கௌரவத்தை ஏற்கமுடியவில்லை. அத்துடன் அரிய பொக்கிசமான எனது பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பித் தருவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை’ என அண்மையில் சிறிலங்கா அதிபருக்கு எழுதிய திறந்த மடலில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
ஒக்ரோபர் 26 அன்று சிறிலங்கா அதிபரால் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டு மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில வாரங்களின் பின்னர், அதிபர் சிறிசேன, அமைச்சின் அனைத்து செயலாளர்களையும் மாவட்டச் செயலர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
‘இந்த நாட்டில் நிலவும் அரசியற் பிரச்சினையானது மிகவிரைவில் தீர்க்கப்படும்’ என நவம்பர் 17 அன்று சிறிலங்கா அதிபர் உறுதி வழங்கியிருந்தார். மக்களின் தேவைகளை முன்னுரிமைப்படுத்தி பணிகளை ஆற்றுமாறும், ‘பக்கச்சார்பற்ற’ வகையில் பணியாற்றுமாறும் அனைத்து அதிகாரிகள் மற்றும் பொதுச்சேவை அதிகாரிகளிடம் சிறிலங்கா அதிபர் வலியுறுத்தியிருந்தார்.
அதிகாரிகள் பாரபட்சமற்ற வகையில் நடப்பதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல.  ராஜபக்சவிடமிருந்து அல்லது அவரின் சகபாடிகளால் கட்டளைகள் வழங்கப்படும் போது அவை எதிர்ப்பைச் சம்பாதிப்பதாக அமையும்..சிறிசேனவின் செயற்பாடுகள் மற்றும்.ராஜபக்சவின் நியமனம் போன்றன தொடர்பாக நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெறுகின்ற போதிலும் கூட இவற்றுக்கும் அப்பால் உயர் மட்ட அரச அதிகாரிகள் தீர்மானங்களை நிறைவேற்றும் போது பக்கச்சார்பாக நடக்க வேண்டிய கட்டாய நிலைக்கு உட்படுகின்றனர்.
நவம்பர் 08 அன்று, அரசியல்வாதிகள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக தன்னால் நியமிக்கப்பட்ட அதிபர் செயலக பணிக்குழு அதிகாரிகளுடன் அதிபர் சிறிசேன சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். ‘இந்தச் சந்திப்பானது மிகவும் முக்கியமானதாகவும் அடுத்த நகர்வுகளை முன்னெடுப்பதற்கான மீளாய்வுக் கூட்டமாகவும் அமைந்தது’ என அதிபர் செயலகப் பணிக்குழுவின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்தார்.
இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவித்தல் மற்றும் வடக்கு கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்துறைகளுக்கு புத்துயிரளித்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் ‘தெளிவான அறிவுறுத்தல்களை’ வழங்கியிருந்தார்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வழங்கியிருந்தனர். இதில் புதிதாக நியமிக்கப்பட்ட ‘அமைச்சர்கள்’ சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.
புதிய அமைச்சர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்வதன் மூலம் தொடர்புபட்ட அதிகாரிகள் தமது பணிகளை இலகுபடுத்த முடியும் என்ற நோக்கிலேயே அதிபர் இதனை ஒழுங்குபடுத்தியிருந்தார்.
ஆனால் அமைச்சுக்களின் தீர்மானங்களை நிறைவேற்றும்போது பல்வேறு சிக்கல்களைச் சந்திப்பதாக அமைச்சுக்களின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டின் தற்போதைய அரசியற் சூழலை ‘தந்திரோபாயமாக’ கையாண்டு சமரசத்தை எட்ட வேண்டிய நிலையிலுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
‘முக்கிய கொள்கைத் தீர்மானங்களை எடுப்பதைத் தவிர்ப்பதற்கு நாங்கள் முயற்சி செய்வதுடன் இதற்குப் பதிலாக மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் நாங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். எல்லாவற்றுக்கும் அப்பால், நாங்கள் எப்போதும் மக்களின் சேவையாளர்களாகப் பணியாற்றுவதே எமக்கான முதலாவது முக்கிய பணியாக உள்ளது’ என குறித்த உயர்மட்ட அதிகாரி தெரிவித்தார்

No comments