மீண்டும் கூடிக்கலைந்த செயலணி:வேடிக்கை பார்க்கும் கூட்டமைப்பு!


வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் மீண்டும் இன்று  பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடி கலைந்துள்ளது.

முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இத்தகைய செயலணிக்கூட்டங்களில் பங்கெடுப்பது வெறுமனே அரசிற்கான நியாயப்படுத்தல்களிற்கு மட்டுமே உதவுமென தெரிவித்த போதும் அதனை மறுதலித்து கூட்டமைப்பினர் தொடர்ந்தும் பங்கெடுத்துவருகின்றனர்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,டக்ளஸ் தேவானந்தா,வடகிழக்கு ஆளுநர்கள் மற்றும் யாழ்.மாவட்டத்தின் இலங்கை இராணுவத்தளபதி ஆகியோர் இன்றைய கூட்டத்தில் பங்கெடுத்திருந்தனர்.

இன்றைய கூட்டத்திலும் அடுத்து அமையப்போகும் அமைச்சரவை இதனை பார்த்துக்கொள்ளுமென மைத்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

அதே போல வடக்கிலுள்ள தொழிற்சாலைகளை தனியாரிடம் ஒப்படைத்து அவர்களது முதலீட்டில் மீள இயக்கவும் அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
எந்தவொரு பலனுமற்ற வெறுமனே கூடிக்கலைந்த கூட்டமிதுவென கூட்டமைப்பின் கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களினை முன்வைத்துள்ளனர்.

இதனிடையே தென்னிலங்கை வர்த்தகர்களிற்கு தொழில் முயற்சியென காணிகளை தாரை வார்க்கும் இலங்கை அரசின் நடவடிக்கைகளிற்கு முன்னாள் முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரன் தடை போட்டு வந்திருந்தார்.இந்நிலையில் தற்போது ஆளுநர் மற்றும் கூட்டமைப்பின் ஊடாக அதனை முன்னகர்த்த மைத்திரி தயாராகி வருவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.  

No comments