பிரான்சில் இடம்பெற்ற தேசத்தின் குரல் பாலா அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் 12 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள் நிகழ்வு, பாரிசின் புறநகரப் பகுதியில் ஒன்றான
நந்தயாரில் 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம் பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் கலைபண்பாட்டுக்கழகச் செயற்பாட்டாளர் திருமதி நந்தகுமார் சிவபூபதி அவர்கள் ஏற்றிவைத்தார்.

ஈகைச்சுடரினை 18.06.1998 அன்று கரிப்பட்ட முறிப்புப் பகுதியில் சிறீலங்காப் படைகளுடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை ஒளியவனின் சகோதரி ஏற்றிவைக்க
மலர் வணக்கத்தை 26.09.1989 அன்று ஓமந்தைப் பகுதியில் இந்தியப் படைகளுடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட  கப்டன் ரூபன் அவர்களின் சகோதரி செலுத்தினார்.

அக வணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
அரங்க நிகழ்வுகளாக தமிழ்ச்சோலை மாணவர்களின் நடனம், எழுச்சிப் பாடல்கள் என்பன இடம்பெற்றதுடன் தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் தொகுப்புக்கள் அடங்கிய காணொளி திரையில் காண்பிக்கப்பட்டது.

சிறப்புரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாகப் பொறுப்பாளர் திரு ப. பாலசுந்தரம் அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில்,

தேசத்தின் குரல் பாலா அண்ணா அவர்களின் செயற்பாடுகள் எமது போராட்டத்தில் எத்தகு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்றும், எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மையை உலகுக்கு எடுத்துச் சென்ற அதேநேரம், எமது போராட்டம் எவ்வாறு அறிவு ரீதியாக நடத்தப் படவேண்டும் என்பதையும் ஆயுதப்போராட்டம் நடைபெற்றபோது அதனை உலகிற்கு எடுத்துச் சென்று உலகத்தை எமது போராட்டத்தின் மீது கரிசனை கொள்ளவைத்தும் இருந்தார்.  சர்வதேசம் அவரின் குரலை செவிசாய்த்தது. சர்வதேசம் அவரை தேடிச் சென்றது. ஆனால், அவரது இழப்பானது போராட்டத்தின் முக்கிய காலகட்டத்தில் ஏற்பட்ட இழப்பாகவே பார்க்கப்படுகின்றது. எமது போராட்டத்தின் முக்கிய காலகட்டத்தில் அவரது இழப்பானது பேரிழப்பாகவே பார்க்கின்றோம்.

எமது போராட்ட வரலாற்றில் பாலா அண்ணாவின் வரலாற்றை  எமது சந்ததிக்கு எடுத்துச் செல்வேண்டியது புலம் பெயர் மக்களின் செயற்பாடாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் முழக்கத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.











No comments