நாட்டுப் பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின்7ஆம் ஆண்டு கல்லறை வணக்க நிகழ்வு!

நாட்டுப் பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 7 ஆம் ஆண்டு கல்லறை வணக்க நிகழ்வு!பிரான்சில் சாவடைந்த நாட்டுப் பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 7 ஆம் ஆண்டு கல்லறை வணக்க நிகழ்வு வில்நெவ் சென் ஜோர்ஜ் பகுதியில் 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3
மணிக்கு இடம்பெற்றது.


 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு ஊடகமையத்தினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பொதுச்சுடரினை ஈழமுரசு வாரமலர் பிரதம ஆசிரியர் திரு. ஜெய்சந்தர் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை நாட்டுப்பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் துணைவியார் ஏற்றிவைத்தார்.


 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களால் நாட்டுப் பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின கல்லறை மீது தேசியக்கொடி போர்த்தி மதிப்பளிப்பு செய்யப்பட்டது. கல்லறைக்கான மலர்மாலையினை நாட்டுப்பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் புதல்வியரும் மருமகனும் அணிவித்தனர். அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செய்தனர். தொடர்ந்து நினைவுரைகளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப்பொறுப்பாளர் திரு. சுரேஸ், ஈழமுரசு வாரமலர் பிரதம ஆசிரியர் திரு. ஜெய்சந்தர் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.


திரு. சுரேஸ் அவர்கள் தனது உரையில், நாட்டுப்பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் அவர்களின் விடுதலை மீதான பற்றுறுதி தொடர்பாக தனது அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார். திரு.ஜெய்சந்தர் அவர்கள் தனது உரையில், நாட்டுப்பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் அவர்களின் 30 ஆண்டுகாலத் தேசியப் பணிகளை நினைவு படுத்தியதுடன், நாட்டுப்பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் அவர்களை நாம் என்றென்றும் நினைவிருத்தி அவர் விட்டுச்சென்ற பணியைத் தொடர்வோம்.

இதுவரை காலமும் ஒரு குடும்ப நிகழ்வாக கல்லறைமுன் நாம் இந்நிகழ்வை நடாத்தியிருந்தோம். இனிவரும் காலங்களில் அனைவரும் ஒருமித்து நினைவு நிகழ்வுகளாக மக்கள்முன் விரித்துப் பணிதொடர்வோம் எனத் தெரிவித்த அவர், இந்நிகழ்வை ஏற்பாடுசெய்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

No comments