ஜதேகவின் ரிமோட் கூட்டமைப்பிடமாம்:மஹிந்த குற்றச்சாட்டு!


தற்போதைய அரசாங்கத்தின் ரிமோட் கன்ட்ரோல் தமிழ் தேசிய கூட்டமைப்பிடமே இருக்கிறதென முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தனது விசேட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 103 உறுப்பினர்களை மாத்திரம் கொண்ட ஐக்கிய தேசிய கட்சி தமிழ் கூட்டமைப்பிடம் சுவாசத்தை கடன்வாங்கி செயற்படுகிறது. அது ஆட்சி கதிரையிலிருக்கின்ற காலத்தில் எந்த அளவு கடன்களை வாங்கி குவிக்குமோ தெரியவில்லை. நாங்கள் வாங்கிய கடன்கள் நாட்டின் அபிவிருத்திக்கானது, ஆனால் அவர்கள் கடன் வாங்குவது செலவழிப்பதற்கு. டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடையவுள்ளது.

நாங்கள் கோரிய பொதுத் தேர்தலை தடுத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, புதிதாக அமைக்கப்படுகின்ற அரசாங்கத்துக்கு ஜனாதிபதியின் ஆதரவு இல்லை. அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகளை ஜனாதிபதியால் கட்டுப்படுத்த முடியுமென எதிர்பார்க்கின்றேன்.

ஆனால் ஜனாதிபதிக்கு தெரியாமலேயே பல விடயங்களை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் செய்யக்கூடும்.

விடுதலைப் புலிகளுடன் சமாதான உடன்படிக்கையில் ரணில் கைச்சாத்திட்டமை குறித்து அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவிற்கு சொல்லப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட்டதைப் போன்று, நாடாளுமன்றத் தேர்தலையும் இந்த அரசாங்கம் பிற்போடும்.

சுதந்திர கட்சியின் ஆதரவையும் சேர்த்தால் ஒன்றிணைந்த எதிரணியான எங்களுக்கு 54 சதவீதமான மக்கள் ஆதரவு உண்டு. அதனை மையப்படுத்தியே பொதுத்தேர்தலை கோருகின்றோம்.

மக்கள் எதிர்பார்த்த அரசியல் மாற்றத்துக்கு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் விரைவில் அது நிறைவேற்றப்படும். அதற்காக பலமான கூட்டணி ஒன்று உருவாக்கப்படுமெனவும் மஹிந்த கோரியுள்ளார்.

No comments