மைத்திரிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்பு மீறல்களைப் புரிந்துள்ளார் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால் அவருக்கு எதிராகக் குற்றவியல் விசாரணைப் பிரேரணையைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த அறிவிப்பை விடுத்தார்.

நாடாளுமன்றைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு அரசமைப்புக்கு முரணானது – சட்ட விரோதமானது என உயர்நீதிமன்றம் இன்று மாலை தீர்ப்பளித்தது. இந்தநிலையில், உயர்நீதிமன்றத் தீர்ப்பை அடிப்படையாக வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நாடாளுமன்றில் குற்றவியல் விசாரணைப் பிரேரணையைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜே.வி.பி. கூறியுள்ளது.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல முறை அரசமைப்பை மீறியிருக்கின்றார். தொடர்ந்தும் அத்தகைய மீறல்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு எதிராகக் குற்றவியல் விசாரணைப் பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்படும். அந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் ஜனாதிபதிப் பதவியை மைத்திரிபால சிறிசேன இழப்பதுடன், அவரது குடியுரிமையும் பறிக்கப்படும்” என்று ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

No comments