யானைக் கூட்டத்துள் குழப்பம் - சுயாதீனமாகச் செயற்பட ஏழுபேர் முடிவு

ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் ஏழுபேர் நாடாளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயற்படுவதற்கு தயாராகிவருகின்றனர்.

இது குறித்து கட்சித் தலைவரான  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விரைவில் அறிவிக்கப்படும் என்று ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட எம்.பியான ஹேஷா விதானகே இன்று தெரிவித்தார்.

” ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அதன் தலைமைத்துவத்துக்கும் ஆபத்து ஏற்பட்டவேளைகளில் பின்வரிசை எம்.பிக்கள்தான் கைகொடுத்தனர். நெருக்கடியான சூழ்நிலையில் எம்மிடம் கொஞ்சி பேசியவர்கள், அமைச்சுப் பதவிகளை பெற்ற பின்னர் கணக்கில் எடுப்பதில்லை.

தேசியப்பட்டியலில் தெரிவானவர்களுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்காக போராடிய எமக்கு எதுவும் வழங்கப்படவில்லை. அமைச்சுகளுக்கு சென்றால் , ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியுள்ளது.

இந்நிலைமை தொடருமானால் நாடாளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயற்படுவதைத்தவிர வேறு வழியில்லை. இதுவரையில் ஏழு எம்.பிக்கள் இதற்கும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்காத அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எதிராக வாக்களிக்கப்படும்.” என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, பதுளை மாவட்ட எம்.பியான சமிந்த விஜேசிறியும் மேற்படி கருத்தையே இன்று முன்வைத்தார்.

No comments