வேண்டாப்பெண்டாட்டியாகும் ரணில் தரப்பு?


ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை (16) காலை 10.00 மணிக்கு புதிய பிரதமராக மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதிய அரசாங்கம் அமைப்பது குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒக்டோபர் 26 முதல் இடம்பெற்ற அரசியல் பதற்ற நிலைமைகள் நாளைக்கு முடிவுக்கு வரவுள்ளன. விரும்பாத மணமகனுக்கும், மணமகளுக்கும் இடையில் திருமணம் செய்து வைப்பதனைப் போன்ற ஒரு நிகழ்வாகவே, அமையவுள்ள அரசாங்கத்தை அரசியல் ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.

ஜனாதிபதி அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு இடைஞ்சலாக அமைந்தால் நாட்டில் அரசியல் ஸ்தீரத் தன்மை கேள்விக் குறியாகவே அமையப் போகின்றது. ஜனாதிபதியின் அணியினர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் இருக்கும் போது ஜனாதிபதியினால் அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படுவது சாத்தியமில்லாத ஒன்று என்பது வெளிப்படையானது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தனது 23 எம்.பிக்களையும் அரசாங்கத்துடன் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என ஜனாதிபதி கூறியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்திருந்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதியுடன் சுமுகமான உறவைப் பேணும் விதமாக நடந்து கொண்டால் ஜனாதிபதியின் தலையீடுகள் குறைவாக காணப்படலாம் என நம்பப்படுகின்றது. ஜனாதிபதியின் கடந்த கால நடவடிக்கைகளையும் அதற்கு எதிராக தாம் அடைந்து கொண்ட வெற்றிகளையும் ஐக்கிய தேசியக் கட்சியினர் குத்திக் காட்டி ஜனாதிபதியை நிந்திக்க ஆரம்பித்தால் முறுகல் நிலைமை உக்கிரமம் அடையும் என்பது மட்டும் சாதாரணமாக யாரும் புரிந்துகொள்ள முடியுமான உண்மையாகும்.

கடந்த கால முறுகல் நிலைமைக்கும் இதுபோன்ற குத்திக்காட்டல்கள்தான் காரணமாகியது என்பதை நடைமுறை அரசியலை விளங்கிய எவரும் மறுக்க மாட்டார்கள்.

ஜனாதிபதியின் விருப்பத்துடனும், இணக்கப்பாட்டுடனும் உருவாகும் ஒர் அரசாங்கமாக இதனைப் பார்க்க முடியாதுள்ளது. இதனால், அரசியல் யாப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வரையறுக்கப்பட்ட பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரத்தை, ஜனாதிபதி நிச்சயமாக நான்கரை வருட நிறைவில் பயன்படுத்தப் போகின்றார் என யாராவது எதிர்பார்த்தால் அதனைத் தவறு என்று கூற முடியாது.

அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதி எத்தனை முக்கிய அமைச்சுக்களை தன்வசம் வைத்துக் கொள்ளப் போகின்றார் என்பதும் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை தீர்மானிக்கப் போகின்றது. பாதுகாப்பு, நிதி, உள்நாட்டலுவல்கள், சட்டம் ஒழுங்கு மற்றும் சுகாதாரம் ஆகிய அமைச்சுக்களை ஜனாதிபதி வைத்திருக்க விரும்பினாலும் அது அரசாங்கத்துக்குள் சர்ச்சையை ஏற்படுத்தும்.

ஏற்கனவே, ஜனாதிபதி கொலை சதி நடவடிக்கை சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி வைத்திருப்பதற்கு காரணமாக அமையலாம். அத்துடன்,  மத்திய வங்கி பிணை முறி மோசடி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகள் என்பன நிதி மற்றும் சுகாதார அமைச்சுக்களை ஜனாதிபதி தன்னிடம்  வைத்திருப்பதற்கான வெளிப்படைக் காரணங்களாக அமையலாம்.

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்தபோது அதாவது 2015 முதல் 2018 ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி வரை அரசாங்கத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி நிதி மோசடி போன்ற ஊழல்,மோசடிகள், முறைகேடுகள் தொடர்பில் கண்டறிவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதன் மூலம் குறித்த ஊழல், மோசடி, முறைகேடுகள் தொடர்பில் மக்களுக்கு அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி கடந்த நவம்பர் 25 ஆம் திகதி வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போது கூறியிருந்தார்.
அத்துடன், ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப்போவதில்லை என்றும் அது தொடர்பாக தான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெளிவாகத் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இது இவ்வாறிருக்கையில், ஐக்கிய தேசிய முன்னணி ஏற்படுத்திய சட்ட ரீதியிலான அழுத்தங்கள் காரணமாகவே ஜனாதிபதி வேறு வழியின்றி ரணில் விக்ரமசிங்கவையே மீண்டும் பிரதமராக நியமிக்கும் தீர்மானித்துக்கு வந்துள்ளார்.

இதேவேளை, அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள மஹிந்த எதிர்ப்பு அதிருப்தியாளர்களை கட்சியில் பாதுகாத்து வைத்துக் கொள்வதும் ஜனாதிபதிக்கு ஒரு தலையிடியாகும்.

ரணில் அரசாங்கத்தில் பங்காளியாக மாற மாட்டேன் என ஜனாதிபதி கூறியுள்ள கருத்தையும் ஜனாதிபதி மாற்றிக் கொள்ள நேரிடுமா? என்பதும் எதிர்பார்க்கவுள்ள அரசியல் மாற்றமாகும். அமைச்சுப் பதவிகளை கொடுத்தால் ஜனாதிபதிக்கு தம்முடன் வைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால், அமைச்சுப் பதவிகளுக்காக கட்சி தாவும் நிலைமை தவிர்க்க முடியாததாக இருக்கும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இருப்புக்கும் ஜனாதிபதி பொறுப்புச் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளார். கட்சியையும், பாதுகாத்துக் கொண்டு அரசியல் நெருக்கடியையும் சமாலித்துக் கொண்டு செல்ல வேண்டிய ஒரு இக்கட்டான நிலைமை ஜனாதிபதிக்குள்ளது.

அமையவுள்ள புதிய அரசாங்கம் தனியாக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கம் என்பதனால், அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்டு மக்கள் ஆதரவைப் பெருக்கும் வகையில் சலுகைகள் நிறைந்ததாக இருக்கும் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு.

அடுத்த இரண்டு வருடங்களில் நாட்டில் 3 வகையான முக்கிய தேர்தல்களை கட்டாயம் நடாத்த வேண்டியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஹம்பாந்தோட்ட மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் (13) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

அரசாங்கம் ஒன்று இருக்கும் நிலையில் தேர்தல்களுக்கு முகம்கொடுப்பது ஐக்கிய தேசிய முன்னணிக்கு சார்பானதாக இருக்கும் என்பது சொல்லி விளக்கத் தேவையில்லாத உண்மையாகும். 

No comments