காசுக்காகத்தான் கூட்டமைப்பு ஐ.தே.கவை ஆதரிக்கிறது என்கிறார் பந்துல


ஐக்கிய தேசியக் கட்சி அரசில் நிதி அமைச்சின் செயலராக கடமையாற்றிய ஆர்.பாஸ்கரலிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, மக்களின் வரிப்பணத்தை நிதியாக வழங்கினார். அதேபோல தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கும் ஐக்கிய தேசியக் கட்சி பணம் வழங்குவதால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்துவருகின்றது  என்று மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

மகிந்த ராஜபக்சவினுடைய ஆட்சிக் காலத்தில் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதா என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அந்த விடயம் இது வரையில் நிரூபிக்கப்படவில்லை. முடிந்தால் ஐக்கிய தேசியக் கட்சி அதனை நிரூபித்துக்காட்டட்டும்.

1989ஆம் மற்றும் 1990ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில், இப்போது ரணிலி; ஆலோசகராக உள்ள ஆர்.பாஸ்கரலிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இலட்சக்கணக்கான பணத்தை வழங்கினார்.

அதற்கான ஆதாரம் எம்மிடம் உள்ளது. ஆரம்ப காலங்களிலிருந்தே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமையாலேயே நாட்டின் பொருளாதாரம் உறுதிப்பாடற்ற நிலமையை இன்று எதிர்கொண்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதுபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஐக்கிய தேசியக் கட்சி நிதி வழங்கிவருகின்ற காரணத்தால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐ.தே.க.வுடன் கைகோர்த்துள்ளனர் – என்றார்.

No comments