சூழ்ச்சி அரசு பதவியைத் துறந்தால் தேர்தலிற்கு தாயார் என்கிறது ஐ.தே.க

” சூழ்ச்சி அரசு, ஆட்சியில் இருக்கும்போது நீதியான – நியாயமான தேர்தலை எதிர்பார்க்கமுடியாது. எனவே, சூழ்ச்சியாளர்கள் பதவி துயந்தால் தேர்தலை சந்திக்க தயார்” என்று ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்துள்ளது.

ஜனநாயகத்தை நிலைநாட்ட – அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண பொதுத் தேர்தலை நடத்துவதே ஒரே வழி என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது விசேட உரையின்போது இன்று அறிவித்திருந்தார்.

இதுதொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் நிலைப்பாடு என்னவென்று அக்கட்சியின் தவிசாளரான கபீர் ஹாசீமிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

” தேர்தலுக்கு அஞ்சும் கட்சி ஐக்கிய தேசியக்கட்சி கிடையாது. எந்தவொரு தேர்தலையும் சந்திப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். ஆனால், குறுக்குவழியில் பதவிக்கு வந்த அரசை வைத்துக்கொண்டு எப்படி தேர்தலை எதிர்கொள்வது?

ஆட்சியைப்பிடிப்பதற்காக அரசமைப்பையே மீறியவர்கள், தேர்தலில் வெற்றிவாகைசூடிக்கொள்வதற்காக எதையும் செய்யலாம். நீதியான, நியாயமான தேர்தலே எமக்கு அவசியம். அப்போதுதான் மக்கள் ஆணை என்னவென்பதையும் உரிய வகையில் கண்டறியமுடியும்.

மஹிந்தவுக்கு தற்போது பெரும்பான்மை இல்லை. இது அவருக்கும், அவரது சகாக்களுக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியாகும். இதைமூடிமறைப்பதற்பாகவே தேர்தலை கோருகின்றனர். எப்படியும் பதவிவிலகவேண்டிவரும். அதன் பிறகு உரிய காலத்தில், உரிய வகையில் தேர்தல் நடத்தப்படும்” என்றார்.

No comments