முன்னணி அலுவலகத்திலும் தேசத்தின்குரலுக்கு நினைவேந்தல்!


தேசத்தின் குரல் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(14-12-2018) பிற்பகல்-05 மணி முதல் யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்  செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில்  அன்ரன் பாலசிங்கத்தின் உறவினர் பாலசுந்தரம் தவக்குமார் உருவப்படத்திற்கு முன்பாக ஈகைச் சுடரேற்றி மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். 

அதனைத் தொடர்ந்து  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்  செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அன்ரன் பாலசிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்திற்கும், தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு உரம் சேர்த்த மாவீரர்களுக்கும் ஒரு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.  

அதனைத் தொடர்ந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அன்ரன் பாலசிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தினார். இதனையடுத்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை மற்றும் பல்வேறு பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், தமிழ்த்தேசியப் பற்றாளர்கள் உள்ளிட்ட பலரும் அன்ரன் பாலசிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தினர். 

அதனைத் தொடர்ந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் திருமதி-வாசுகி சிவகுமார் ஆகியோர் நினைவுரைகளாற்றினர்.  

No comments