விசாரணைக்குழுவிற்கு புதிய தலைவர்?

இரணைமடுகுளம் முகாமைத்துவம் தொடர்பில் விசாரணை செய்யும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட யாழ் பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார்  அக்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வடமாகாணசபையின் செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்திருந்த சிவகுமாரை விசாரணைக்குழு தலைவராக நியமிக்க அவரது சொந்த கிராமத்தை சேர்ந்தவரும் தற்போது ஆளுநரது ஆலோசகராக உள்ளவருமான சுந்தரம் டிவகலாலா பரிந்துரைத்துள்ளார்.

முன்னதாக நிக்கொட் திட்டபணிப்பாளராகவும் சிவகுமார் பணியாற்றியிருந்தார்.

எனினும் இரணைமடு குள விவகாரத்தில் வடமாகாணசபை பொறியியலாளர்கள் சீராக செயற்படவில்லையென அவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சிவகுமார் பகிரங்கமாக முன்வைத்து வந்திருந்தமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து அவர் விசாரணைக்குழுவிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் வழங்கிய அறிவித்தல்களுக்கு அமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

யாழ்  பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் தலைமையில் வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர்( பொறியியல்) எஸ். சன்முகநாதன், வடக்கு மாகாண  விவசாயப் பணிப்பாளர்  சிவகுமார் ஆகியோர் அடங்கிய குழுவையே ஆளுநர் நியமித்திருந்தார்.

கடந்த 21 ஆம் திகதி பெய்த கடும் மழையின் போது இரணைமடுகுளத்தின் நீர் கொள்ளளவு சடுத்தியாக உயர்ந்த போதும் குளத்தின் வான்கதவுகள் உரிய நேரத்தில் திறக்கப்படாது விட்டதனால் இந்த வெள்ளப் பாதிப்புக்கள்  ஏற்பட்டது எனத் தெரிவித்து அதற்கான விசாரணைகளை முன்னெடுக்கவே இவ்விசாரணை குழுவை அமைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

No comments