மீண்டும் மகிந்தவை பிரதமராக்க மைத்திரி வியூகம்


நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா ஜனதிபதியின் அரசிதழ் அறிவிப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மகிந்த ராஜபக்ச தலைமையில் மீண்டும் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, நாடாளுமன்ற கலைப்புக்கு சாதகமாக வந்தால், அடுத்த பொதுத்தேர்தல் வரை மகிந்த ராஜபச்சவை பிரதமராக கொண்ட புதிய இடைக்கால அரசாங்கம் ஒன்றை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிப்பார் என்று கூறப்படுகிறது.

அதேவேளை, அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்தும் பல்வேறு மட்டங்களிலும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம், மகிந்த ராஜபக்ச மற்றும் ஐதேக உள்ளிட்ட கட்சிகளுடனும் ஆலோசனைகளை நடத்தியிருந்தார்.

அதேவேளை மகிந்த ராஜபக்சவும் கடந்த சில நாட்களாக, எதிர்த்தரப்பைச் சேர்ந்த பலருடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் ஏதாவது ஒரு அரசாங்கத்தை அமைத்து, தற்போதைய அரசியல் நெருக்கடியை தீர்க்க வேண்டிய நிலையில் மைத்திரி இருக்கிறார்.

இடைக்கால அரசாங்கத்தை அல்லது, அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைத்து இந்த நெருக்கடியை தீர்ப்பதிலேயே அவர் கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு தமக்கு சாதகமாக வந்தால், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு அழுத்தங்களை கொடுப்பதற்கு ஐதேக தயாராகி வரும் நிலையிலேயே, ஜனாதிபதி மைத்திரி அதற்கு மாற்றான திட்டங்களை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

No comments