இரணைமடுகுளத்தில் மோசடியா?விசாரணைக்கு குழு!


இரணைமடுக்குளத்தின் நிர்மாணப்பணிகளில் மோசடிகள் நடந்திருப்பதாகவும் இரணைமடுவின் வான்கதவுகைள உரிய காலத்தில் திறந்துவிடாமைக்கு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அழுத்தங்களே காரணமெனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள யாழ் பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் தலைமையில் வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர்( பொறியியல்) எஸ். சன்முகநாதன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் அடங்கிய குழுவை வடக்கு மாகாண ஆளுநர் நியமித்துள்ளார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களுக்கும்  மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கும் யார் குற்றவாளிகள் என்பதை கண்டறிய வேண்டியது அவசியம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா கோரியிருந்தார்.

வெள்ள அனர்த்தங்களில் இருந்து மக்களை மீளவும் மறுவாழ்வுக்கு கொண்டு வருதல், அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது. 

அங்கு கருத்து தெரிவித்த டக்ளஸ் இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் பெய்து கொண்டிருந்த கனமழையை அடுத்து 35 அடியை எட்டிய போது வான்கதவுகள் படிப்படியாக திறந்துவிடப்பட்டிருக்குமேயானால் மக்கள் இவ்வாறான அழிவுகளுக்கு முகம்கொடுத்திருக்க மாட்டார்கள்.

அதை விடுத்து குளத்து நீர் நிரம்பியதன் பின்னர் வான்கதவுகள் சடுதியாக திறக்கப்பட்டதன் ஊடாக மக்களின் குடியிருப்புக்களுக்குள் நீர் புகுந்து கொண்டது.அது மட்டுமல்லாமல் அங்கிருந்த உடமைகளை அடித்துச்சென்றது. நெற்பயிர்களையும் அழித்ததுடன் கால்நடைகளையும் அழிவடைய காரணமாக அமைந்துள்ளன.

அதுமாத்திரமன்று குளத்தின் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கும் போது அவரவர் தமக்கு விரும்பியவாறு புனரமைப்பு பணிகளை முன்னெடுக்காது தூர நோக்குடன் கூடியதான எதிர்கால திட்டத்தை கருத்திற் கொண்டு புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படல் வேண்டியது அவசியமானது.


கடந்த காலங்களில் இவ்வாறு குறித்த பணிகள் முன்னெடுக்காத பட்சத்திலேயே இவ்வருடம் பெய்த பெரும் மழையால் எமது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டிருந்தது.

அந்த வகையில் நீர் முகாமைத்துவ  சீரின்மையே வெள்ளப்பெருக்குக்கும் மக்களின் இவ்வாறான அவலங்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது. எனவே இவ்வாறான அனர்த்தங்களுக்கும்  மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கும் யார் குற்றவாளிகள் என்பதை கண்டறிய வேண்டியது அவசியமானது என விசாரணையூடாக ஆராயப்பட வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாகவே அவசர அவசரமாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

No comments