ஜனாதிபதியை கேள்விக்குட்படுத்த உச்சநீதிமன்றுக்கு அதிகாரமில்லை

நாடாளுமன்றத்தைக் கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இதன்போது மனுக்கள் மீதான தனது தரப்பு அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்த சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இந்த மனுவை விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அரசமைப்பை மீறுகின்ற சந்தர்ப்பத்தில் அது சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை சம்பந்தமாக அரசமைப்பின் 38 (2) அ சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி அரசமைப்பை மீறி இருந்தால் அது சம்பந்தமாக நாடாளுமன்றத்தால் மாத்திரமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் நீதிமன்றில் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை 07 நீதியரசர்கள் முன்னிலையில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனு விசாரிக்கப்படுகின்றது.

No comments