ஐனநாயக போராளிகள் கட்சி பேச்சாளர் நாலாம் மாடிக்கு அழைப்பு

ஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தரும் ஊடக பேச்சாளருமான துளசி என அழைக்கப்படும் கணேசலிங்கம் சந்திரலிங்கத்தை பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் வாக்கு மூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக நெடுங்கேணி சேணப்பிழவில் வசிக்கும் துளசியை எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவின் இரண்டாம் மாடிக்கு வருமாறு இன்றையதினம் அழைப்பு விடுக்கப்பட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆயினும் என்ன காரணத்திற்காக விசாரணைக்கு அழைக்கப்படுகின்றார் என்பது தொடர்பில் அந்தக கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இதற்கு முன்னர் கடந்த 2016 ஆம் ஆண்டும் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைக்காக துளசியை அழைத்து சில மணிநேரங்கள் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

அதே போன்று ஐனநாகப் போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் பயங்கரவாத விசாரணைகள் பிரிவினரால் தொடர்ந்தும் அழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டிருந்ததும்  குறிப்பிடத்தக்கது.

நாட்டில் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் அதிகாரப் போட்டியில் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்த் தரப்புக்கும் இருக்கின்ற நிலையில் அதே தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் வகையிலேயே விசாரணைகளுக்கு அழைக்கப்படுவதாகவும் போராளிகள் கட்சியினரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

No comments