அன்னப்பறவையில் ஜக்கிய தேசிய கட்சி?


ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், 'அன்னப்பறவை' சின்னத்தில் புதிய கூட்டணியில் போட்டியிடுவதற்கான தயார்ப்படுத்தல்கள் இடம்பெறுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றன.

பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸ களமிறக்கப்பட்டு, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு பல கூட்டணி கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ள போதும், ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கமான தரப்பினர் மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கூறினார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகித்த பலர் இன்றும் எதிர்வரும் நாட்களிலும் பொதுஜன முன்னணியில் இணைகின்றனர். இது சிறிலங்கா சுதந்திர கட்சியின் வாழ்வா சாவா காலம் என்று பார்க்கப்படுகிறது. குறிப்பாக மகிந்தராஜபக்ஷவும் இன்றையதினம் சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துக் கொண்டார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரத்துக்கு எதிராக நாளையதினம் ஜேவிபி, தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில கட்சிகள் உயர்நீதிமன்றம் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஐக்கிய தேசிய கட்சி இந்த விடயத்தில் ஆர்வம் இல்லாமல் இருப்பதாகவும், அது தேர்தலை நோக்கி நகர ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு இழுபறி நிலை ஏற்பட்டால், மார்ச் மாதம் அளவில் தேர்தல் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் நம்புகின்றன.

உத்தேச பொதுத்தேர்தலில் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்கள் இருவர் சிறிலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பிரதமர் மாற்றம், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்களில் தவறுகள் இடம்பெறவில்லை என்பதை விளக்கப்படுத்தும் வகையிலான கடிதங்கள், கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு வரும்வாரம் வெளிவிவகார அமைச்சினால் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

அத்துடன் வெளிநாடுகள் ராஜதந்திர ரீதியான தொடர்புகளை வெளிவிவகார அமைச்சின் ஊடாகவே பேண வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்படும் என்று கூறப்படுகிறது

No comments