தமிழர் தாயகத்தை மீட்டெடுங்கள் - யாழில் திருமாவளவன் பேச்சு


தமிழ​ர் தாயகத்​தை மீட்டெடுத்து அதை தமிழர்களிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளை, தமிழ்த் தலைமைகள் மேற்கொள்ள வேண்டுமென, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற  மரங்கள் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

இது குறித்து தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இதற்கு முன்னர் 2002ஆம் ஆண்டில் வன்னிக்கு வந்திருப்பதாகவும் அப்போது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்துக் கலந்துரையாடியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

பின்னர் 2004ஆம் ஆண்டிலும் வடக்குக்கு, விஜயம் மேற்கொண்​டதாகத் தெரிவித்ததுடன், அப்போதும் தலைவர் பிரபாகரனை சந்தித்துக் கலந்துரைடியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன் பின்னர், 2010ஆம் ஆண்டில் தலைவர் பிரபாகரின் தந்தை வேலுப்பிள்ளை காலமானதையடுத்து, அவரின் இறுதிக் கிரியைகளுக்காக இலங்கைக்கு வருகைத் தரமுற்பட்டபோது, தன்னை விமான நிலையத்தில் வைத்தே, தாயகத்துக்கு திருப்பி அனுப்பி விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளதாக, ஜனாதிபதி அறிவித்துள்ளார். இத்தருணத்தில் தமிழ் மக்களாகிய தாம் மிகவும் நிதனாமாகச் செயற்பட வேண்டி காலக்கட்டத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்னும் எமது மண்ணில் இருந்து இராணுவம் முழுமையாக வௌியேற்றப்படவில்லை. சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன, சிங்கள மயமாக்கல் அதிகரித்துள்ளன என, அவர் மேலும் கூறினார்.

No comments