வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினரை பதவிநீக்கும் வழக்கு ஒரு முக விசாரணைக்கு
வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கந்தசாமி சதீஸை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கும் கட்சித் தலைமையின் தீர்மானத்துக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒருமுக விசாரணைக்கு நியமிக்கப்பட்டது.
மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்த போது, எதிர்மனுதாரர்களான தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, செயலாளர் கி.துரைராசசிங்கம் மற்றும் பொருளாளர் பொ.கனகசபாபதி ஆகியோர் மன்றில் முன்னிலையாகத் தவறினர்.
அவர்கள் சார்பிலான சட்டத்தரணிகள் எம்.ஏ.சுமந்திரன், கே.சயந்தன் ஆகியோரும் மன்றில் தோன்றவில்லை. எதிர்மனுதாரர் மன்றின் தோன்றி பதிலி அணைக்கத் தவறியதால், மனு மீதான விசாரணையை மனுதாரரை மட்டுமே கொண்ட ஒருமுக விசாரணைக்கு நியமித்து வழக்கை ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி விநாயகமூர்த்தி இராமக்கமலன் உத்தரவிட்டார்.
தமிழர் விடுதலைக் கழகம் (ரெலோ) கட்சியைச் சார்ந்த கந்தசாமி சதீஸ், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ரெலோவின் கட்டுப்பாடுகளிலிருந்து விலகிச் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் அந்தக் கட்சியின் பரிந்துரையின் பேரில் சதீஸை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அந்தக் கட்சி நீக்கியது.
இந்த நடவடிக்கையின் ஊடாக அவரை நகர சபை உறுப்புறுமையிலிருந்து நீக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளருக்கும் தமிழ் அரசுக் கட்சி சார்பில் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. தமிழ் அரசுக் கட்சியின் தலைமை எடுத்துள்ள தீர்மானத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தும் அதனை வெற்றும் வறிதானதுமாக்கும் கட்டளையை வழங்கக் கோரியும் கந்தசாமி சதீஸ் சார்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனால், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் நீதிப் பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மனுவின் பிரதிவாதிகளாக தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, செயலாளர் கி.துரைராசசிங்கம் மற்றும் பொருளாளர் பொ.கனகசபாபதி ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனுதாரரின் இடைக்கால நிவாரணமான, தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கும் பிரதிவாதிகளின் அறிவித்தலுக்கு கட்டாணை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற மாவட்ட நீதிமன்றம், 14 நாள்கள் என்ற அடிப்படையில் இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியது.மனு மீதான விசாரணை இன்று 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. பிரதிவாதிகள் மன்றில் முன்னிலையாகத் தவறினர். அத்துடன், அவர்கள் சார்பான சட்டத்தரணிகளும் மன்றில் தோன்றவில்லை. அதனால் ஒருமுக விசாரணைக்கு வழக்கை நியமித்து மாவட்ட நீதிமன்றம் மனுவை ஒத்திவைத்தது.
Post a Comment