ரணில் மீண்டும் பிரதமர்:மைத்திரி ராஜினாமா?


மஹிந்த மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இதுவரை ஜக்கிய தேசியக்கட்சி சார்ந்த 102 பேர் ஒப்பமிட்டுள்ளனர்.தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் ஜேவிபியின் ஆதரவும் கிட்டுகின்ற வகையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெற்றால் மஹிந்த பதவி இழப்பார்.அதனை தொடர் புதிய பிரதமரை நாடாளுமன்றம் தெரிவு செய்யும். ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை உள்ளவர் என்று சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பார்.

அதனை தொடர்ந்து ஜனாதிபதியே அவருக்கான பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டிய நிலை ஏற்படுமென அவதானிகள் தெரிவிக்கின்றனர். பிரதமராக ரணிலை ஏற்கமாட்டேன் என்ற மைத்திரி மீண்டும் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பரா என்பதே தற்போதுள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.

இதனிடையே ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதானது அடுத்து தனக்கு எதிராக குற்றவியல் பிரேரணையை கொண்டுவருவதற்கு இடமளித்துவிடும் என்பதையும் ஜனாதிபதி புரிந்து கொண்டுள்ளதாக தென்னிலங்கை ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே ஜனாதிபதி நாடாளுமன்றத்தினை வழக்கு நிறைவடையும் வரையில் ஒத்திவைக்க முயற்சிப்பார். அதற்கு பொலிஸ்மா அதிபர் உட்பட முப்படையினரையும் வரவழைத்து கூட்டமொன்றை மேற்கொண்டு பதற்றத்தினை தடுப்பதற்காக ஒத்திவைப்பு அறிவிப்பினை விடுத்துள்ளேன் என்று காரணமும் கூறலாமென எதிர்பார்ப்புக்களுமுள்ளது.

மறுபுறம் பெரும்பான்மையை ரணில் கொண்டிருந்தாலும் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் பதவிப்பிரமாணம் செய்வது தொடர்பில் அறிவிப்பேன். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்ற போது இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்வது முகாந்திரமற்றதாகும் என்றும் வியாக்கியான ரீதியிலான காரணமொன்றை முன்வைக்க மைத்திரி முற்படலாம்.

இல்லையேல் நாளை ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் ஏலவே கூறியது போன்று ஜனாதிபதி இராஜினாமாவும் செய்யலாமெனவும் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.No comments